அடுத்தடுத்து வெளியாகும் 7 பிரம்மாண்ட படங்கள்: தென்னிந்திய சினிமாவை ஆக்கிரமிக்கும் கயாடு லோஹர்!

சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'சூர்யா 48' திரைப்படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார்.
Kayadu Lohar upcommikng films
Published on

'டிராகன்' திரைப்படம் மற்றும் 'பவழ மல்லி' மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த நடிகை காயடு லோஹர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகி தென்னிந்திய சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அவரது அடுத்தடுத்த 7 முக்கியத் திரைப்படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அவரது அடுத்த வரவாக ஜூலை 10 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் 'இதயம் முரளி' திரைப்படம் வெளியாகிறது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் அதர்வா, ஃபஹத் பாசில், பிரீத்தி முகுந்தன் ஆகியோருடன் காயடு லோஹர் இணைந்து நடித்துள்ளார். இது காலங்கள் கடந்தும் மாறாத ஒருதலைக் காதலின் வலியைப் பேசும் அழுத்தமான காதல் திரைப்படமாக அமையவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'இம்மார்டல்' திரைப்படம் வெளியாகிறது.

மலையாளத்தில் ஆகஸ்ட் 20 அன்று வெளியாகவிருக்கும் 'ஐ அம் கேம்' திரைப்படத்தில் காயடு லோஹர் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்த அதிரடித் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

அடுத்த நாளே, அதாவது ஆகஸ்ட் 21 அன்று அவரது தெலுங்குத் திரைப்படமான 'தி பாரடைஸ்' வெளியாகிறது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, மோகன் பாபு ஆகியோர் நடிக்கும் இந்த பீரியட் டிராமா திரைப்படத்தில் காயடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழில் மேலும் இரண்டு முக்கியத் திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' திரைப்படத்தில் காயடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் வரவேற்பைப் பெற்ற 'வாழை' திரைப்படத்தின் தொடர்ச்சியாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும், சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'சூர்யா 48' திரைப்படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார். 'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் மற்றும் சூர்யா இணையும் இத்திரைப்படம், ஏழைகளின் மருத்துவர் என்று அழைக்கப்படும் திருவேங்கடம் வீரராகவன் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதுமட்டுமன்றி, வினய் கோவிந்த் இயக்கத்தில் நிவின் பாலி, நிகிலா விமல் ஆகியோருடன் காயடு லோஹர் இணைந்துள்ள 'தாரம்' என்ற மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு மூன்று மொழிகளிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வரும் காயடு லோஹர், தென்னிந்திய சினிமாவின் அடுத்த டாப் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com