

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு மாதமும் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதம் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
* கடந்த 2022-ல் வெளியான கட்டா குஸ்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள, அதன் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2’ ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். ரம்யா பாண்டியன், யோகிபாபு ஆகியோர் கூடுதலாக இணைந்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளனர்.
* அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்தி மற்றும் அஞ்சனா நேத்ரன் நடிக்கும் 'டார்க்' (Dark) திரைப்படம் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'டாடா' பட புகழ் கணேஷ் கே. பாபு கதையில், மனு ரமேசன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் அபிஷேக் நாமாவின் இயக்கத்தில், நடிகர் விராட்கர்ணா கதாநாயகனாக நடித்து முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நாகபந்தம்’. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது.
I Nobody என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரைம்-ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படமாகும். இது ஜூலை 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நிசம் பஷீர் இயக்கி, சமீர் அப்துல் எழுதியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு வங்கிக் கொள்ளையைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க, கடுமையான விசாரணை மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராடுவதே படத்தின் கதைக்களம்.
* ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் குடும்பத்திலிருந்து மற்றுமொரு புதிய வாரிசு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தனுஷின் அக்கா கார்த்திகா தேவியின் மகனான பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்' திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
* கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
* தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து ‘ஜி.டி.என்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
* ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதனை தொடர்ந்து ‘அன்பே டயானா’ படம் வருகிற 17-ந்தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
* கணேஷ் விநாயகம் இயக்கத்தில் உருவாகியுள்ள "அருள்வான்" திரைப்படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ், காளி வெங்கட், கிருத்திகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம், ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
* நடிகர் யோகிபாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ . அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
* பகவான், ப்ளாக் கோல்டு, ஓ சுகுமாரி, தி டார்க் ஹெவன் உள்ளிட்ட படங்கள் வருகிற 17-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இம்மார்டல்’. ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா ஆகியோர் நடித்துள்ளனர். மாரியப்பன் சின்னா இயக்கி உள்ள இப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
* கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'சத்தியவான் சாவித்திரி'. பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது.
* சேத்தன் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’. சாகர் பி. ஷிண்டே எழுதி, தயாரித்துள்ள இப்படம், பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது தொடர்பான முறைகேடுகளின் பின்னணிகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மங்கேஷ் தாக்டே படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 24-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படம் ‘சிக்மா’. இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘சிக்மா’ திரைப்படம் வருகிற 31-ந்தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.