

'ஜெயிலர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு இந்திய திரையுலகில் உச்சத்துக்கே சென்றுள்ளது.
குறிப்பாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நெல்சன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான மாஸ் தகவலை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அதிபர் நாக வம்சி வெளியிட்டு, ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இக்கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் நாக வம்சி, தற்போதைய சூழலை தங்களது நிறுவனம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இயக்குநர் நெல்சன் தங்களது தயாரிப்பு வரிசையில் கண்டிப்பாக இருக்கிறார் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தங்களுக்குள் இருக்கும் கமிட்மெண்ட் எப்போதுமே மாறாது என்று குறிப்பிட்ட அவர், நெல்சன் தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குநர் என்றும், தொடக்கத்திலிருந்தே அவரும் ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததாகவும் கூறினார்.
அதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த நாக வம்சி, தற்போது இருவருக்குமான கால்ஷீட் தேதிகளை முறைப்படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாகக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
நெல்சனின் டார்க் காமெடி பாணியும், ஜூனியர் என்.டி.ஆரின் அசாத்தியமான மாஸ் ஆக்ஷன் மிரட்டலும் இணையும் போது, அது இந்திய திரையுலகில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தேவரா' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் பான்-இண்டியா ஸ்டாராக உலகளவில் கவனிக்கப்பட்டு வருவதால், இந்தப் படமும் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான்-இண்டியா ரிலீஸாகவே திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போது ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து 'வார் 2' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். மறுபுறம் நெல்சனும் தனது அடுத்த கதைக்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களின் தற்போதைய கமிட்மெண்ட்கள் முடிந்தவுடன், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.