ஜேசன் சஞ்சய்-முதல்வர் விஜய் வைரல் வீடியோ: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த பாசத்துடனும், அலாதி அக்கறையுடனும் பேசியிருப்பது, அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரிவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
Jason Sanjay-CM Vijay Viral Video
Published on

தமிழக முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ இந்த வதந்திகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், ஜேசன் சஞ்சய் குழந்தை ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தனது தந்தை விஜய் குறித்த சுவாரசியமான சிறுவயது நினைவொன்றைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதில், சஞ்சய் பள்ளி முடிந்து வெளியே வரும்போது, விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது தலைவனின் மகனைப் பார்த்த ஆவலில், சிறுவனான சஞ்சய்யைத் தூக்கித் தனது தோளில் வைத்துக் கொண்டுள்ளார்.

திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் பயந்துபோன சஞ்சய், தன்னை யாரோ கடத்தப் பார்க்கிறார்கள் என்று நினைத்து அழுதுகொண்டே அவரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். சற்று நேரத்தில் அங்கு கார் மூலம் வந்த நடிகர் விஜய், சஞ்சய்யை பத்திரமாக காரின் பின் இருக்கையில் ஏற்றியுள்ளார்.

இந்த சுவாரசியமான கதையை கேமராவிற்குப் பின்னால் இருந்த அந்த ரசிகரே மீண்டும் விவரிக்க, ஜேசன் சஞ்சய் தனது தந்தையுடன் ஒரு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது அவரே இந்த நினைவை மீண்டும் தனக்கு நினைவு கூர்ந்ததாக அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

விஜய்-சங்கீதா தம்பதியரின் விவாகரத்து வதந்திகள் பரவிய காலகட்டத்தில், ஜேசன் சஞ்சய் தனது சமூக வலைதள பக்கத்தில் தந்தையைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்றும், தனது பெயருக்கு பின்னால் இருந்த தந்தையின் இனிஷியலான 'V' என்ற எழுத்தை நீக்கிவிட்டு தாயின் இனிஷியலான 'S' என்பதைச் சேர்த்துக் கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வந்தன.

தற்போது பரவி வரும் இந்த புதிய வீடியோவில், தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த பாசத்துடனும், அலாதி அக்கறையுடனும் பேசியிருப்பது, அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரிவும் இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக ரசிகர்கள் இணையத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராகத் தனது முதல் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சிக்மா' என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படம் வரும் 31ம் தேதி அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com