

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத்தின் திருமண விழாவில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், அவர் இயக்கியுள்ள முதல் படமான 'சிக்மா' ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகியுள்ளன.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் குடும்பத்துத் திருமண விழாவில் ஜேசன் சஞ்சய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்த ஜேசன் சஞ்சய், மணமக்களை வாழ்த்தியதோடு லைகா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார்.
இவரைத் தங்கள் நிறுவனம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக லைகா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இம்மாதம் 31ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இத்திரைப்படம் ஆக்ஷன், காமெடி, ட்ரெஷர் ஹன்ட் மற்றும் ஹைஸ்ட் போன்ற விறுவிறுப்பான அம்சங்கள் நிறைந்த ஒரு கமர்ஷியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், அம்புதாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'சிக்மா ஸ்டைல்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதி கட்டப் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பிற புரொமோஷன் அப்டேட்டுகள் மிக விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.