

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படம், பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், நீதிக்காகப் போராடிய முன்னாள் நீதிபதி சந்துருவின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘ஜெய் பீம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இயக்குநர் ஞானவேல் மற்றும் சூர்யா கூட்டணி எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.
இந்த நிலையில், சூர்யாவின் 48-வது படத்தை ஞானவேல் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் சமூக அக்கறை கொண்ட மற்றொரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
40 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றியபோது, சிகிச்சைக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுவந்த "திருவேங்கடம் வீரராகவன்" என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமாக இது அமையும் என்று கூறப்படுகிறது. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மருத்துவரான அவர், ஏழை எளியோருக்கு உதவுவதிலேயே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.