'U1niverse' உடன் இணையும் இசைஞானி: ஐரோப்பிய ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டம்!

இந்த இசை நிகழ்ச்சி, வருகிற வெள்ளிக்கிழமை அன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற உள்ளது.
Isaignani joins forces with 'U1niverse
Published on

இசைஞானி இளையராஜா தனது திரையுலகப் பயணத்தின் 50-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரம்மாண்ட இசைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இசைப்பயணத்தில் அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து இருவரும் ஐரோப்பாவிற்குப் புறப்பட்ட புகைப்படத்தை இளையராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி, வருகிற வெள்ளிக்கிழமை அன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 11, சனிக்கிழமை அன்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற OVO Arena Wembley மைதானத்தில் அடுத்த இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஐரோப்பிய நிகழ்ச்சிகளில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதோடு, 'U1niverse' என்ற பெயரில் தனியாகவும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். ஐரோப்பாவைத் தொடர்ந்து லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் ஆகிய நகரங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பாஸ்டன், சிகாகோ, டல்லாஸ், அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இளையராஜா இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு லண்டனின் புகழ்பெற்ற Eventim Apollo அரங்கில் 'வேலியண்ட்' என்ற மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியை நிகழ்த்திய முதல் ஆசியத் திரைப்பட இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இளையராஜா படைத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், தற்போது தனது 50 ஆண்டுக்கால இசைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக இந்த சர்வதேச இசைப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com