இருமுனை திரைப்படம்

இருமுனை-  திரை விமர்சனம்

அன்பு மட்டுமே அவர்களது வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
Published on
இருமுனை-  விமர்சனம்(2 / 5)

கதை

வறுமையில் வாழ்ந்தாலும், ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசித்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் நாயகன் கிரி மற்றும் நாயகி சஜினி பாண்டி.

அவர்களது வாழ்க்கையில் பெண் குழந்தை பிறந்த பிறகு, அந்த குடும்பத்தின் சந்தோஷம் மேலும் அதிகரிக்கிறது. பொருளாதார ரீதியாக பல சிரமங்கள் இருந்தாலும், அன்பு மட்டுமே அவர்களது வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

இந்த நிலையில், அவர்களது வாழ்க்கைக்குள் வில்லன் ஸ்டாலின் நுழைந்ததும், அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. கணவன் - மனைவிக்குள் நம்பிக்கையின்மை உருவாவதோடு, இருவருக்கும் இடையே விரிசலும் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் சஜினி பாண்டி, ஸ்டாலினுடன் இணைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால் அந்த குடும்பத்தில் நடக்கும் தொடர் சம்பவங்கள், இறுதியில் அவர்களது குழந்தையின் உயிரையே பறிக்கும் சோகமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியில் இந்த குடும்பத்தின் சிதைவுக்கு காரணம் என்ன?, கணவன் - மனைவி மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிரி, ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் வாழ்க்கையை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மற்றும் குழந்தை மீது அளவற்ற பாசம் கொண்டவராகவும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் மனம் உடைந்து தவிப்பவராகவும் தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சஜினி பாண்டி, மனைவியாகவும், தாயாகவும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஸ்டாலின், கதைக்கு தேவையான எதிர்மறை தன்மையை தனது நடிப்பின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையான அளவில் பயணித்திருக்கிறார்கள்.

இயக்கம்

எழுதி இயக்கியிருக்கும் கிரி, மனித மனதின் இருவேறு நிலைகளையும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கை, துரோகம், பிரிவு போன்ற உணர்வுகளையும் மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்.

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், தவறான மனிதர்களின் வருகை ஒரு குடும்பத்தின் நிம்மதியை எப்படி சிதைக்கிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

அதே சமயம், திரைக்கதையில் சில காட்சிகள் இன்னும் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டிருந்தால் கதாபாத்திரங்களின் உணர்வுகள் பார்வையாளர்களிடம் இன்னும் ஆழமாக சென்றிருக்கும்.

ஒளிப்பதிவு

தினேஷ் ஒளிப்பதிவில் குடும்பக் காட்சிகளையும், உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இயல்பாக காட்சிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.

இசை

பாசிலின் பின்னணி இசையும் கதையின் சோக உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் பயணித்து காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com