"சாதி, மதம் அற்றவர்"- நடிகர் பார்த்திபனுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு

மனு, உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது.
"சாதி, மதம் அற்றவர்"- நடிகர் பார்த்திபனுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு
Published on

நடிகர் பார்த்திபனுக்கு சாதி- மதமற்றவர் என்ற சான்றிதழ் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என சோழிங்கநல்லூர் வட்டாச்சியர்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1958-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பிறந்த தனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின் சான்றுகளை பெறவில்லை எனவும் தனது சாதி, மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்று எதுவும் தன்னிடம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, சாதி - மதமற்றவர் என சான்று கோரி வேளச்சேரி தாசில்தாரருக்கு விண்ணப்பித்ததாகவும், அந்த விண்ணப்பம், சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு "ஜாதி-மதம் அற்றவர்" என்ற சான்றிதழ் வழங்குமாறு சோளிங்கநல்லூர் வட்டாச்சியர்க்கு உத்தரவிட்டுள்ளார்.

சான்றிதழ் வழங்கியது தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com