இளையராஜா-சரிகம காப்புரிமை வழக்கு: 134 படங்களின் பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

திரைப்படத்திற்காக உருவாக்கப்படும் இசைப் படைப்புகளின் முதல் உரிமையாளர் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரே ஆவார்.
Ilayaraja-Saregama Copyright Case
Published on

இசையமைப்பாளர் இளையராஜாமற்றும் சரிகம நிறுவனத்திற்கு இடையே 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு காப்புரிமை தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த வழக்கில், 1976 முதல் 2001 வரை இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தமானவை என்று சரிகம நிறுவனம் வாதிட்டுள்ளது. அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுடன் சட்டப்பூர்வமான ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய மற்றும் நிரந்தர காப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அந்தப் பாடல்களை இளையராஜா தனது சொந்த இசைப் படைப்புகள் எனக் குறிப்பிட்டு Amazon Music, iTunes, JioSaavn உள்ளிட்ட டிஜிட்டல் இசைத் தளங்களில் பதிவேற்றியதுடன், அவற்றின் பயன்பாட்டிற்கு உரிமை கோரியிருப்பது காப்புரிமை மீறலாகும் என்று சரிகம நீதிமன்றத்தில் வாதிட்டது.

சரிகம தரப்பு, 1957-ஆம் ஆண்டு இந்திய காப்புரிமைச் சட்டத்தின்படி, திரைப்படத்திற்காக உருவாக்கப்படும் இசைப் படைப்புகளின் முதல் உரிமையாளர் பொதுவாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரே என்றும், தயாரிப்பாளரிடமிருந்து உரிமை பெற்ற நிறுவனம் அந்த உரிமையைச் சட்டப்படி பயன்படுத்த முடியும் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி , சரிகம நிறுவனத்தின் வாதத்தில் ஆரம்பகட்ட ஆதாரம் இருப்பதாகக் கருதி, ஏற்கனவே பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையை தொடர உத்தரவிட்டார். இதன்படி, சரிகம நிறுவனம் உரிமை கொண்டதாகக் கூறும் 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா அல்லது அவரது பிரதிநிதிகள் பயன்படுத்தவோ, அவற்றின் மீது உரிமை கோரவோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் வழங்கவோ கூடாது.

மேலும், இந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டால் சரிகம நிறுவனத்திற்கு பின்னர் ஈடுசெய்ய முடியாத வர்த்தக மற்றும் சட்டரீதியான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, தடையை நீக்கக் கோரிய மனுவை நிராகரித்து, வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடரும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வழக்கு, திரைப்பட இசையின் காப்புரிமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்திய இசைத்துறையில் முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இசையமைப்பாளரின் படைப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளரின் உரிமை, இசை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட காப்புரிமை ஆகியவற்றின் எல்லைகளை நீதிமன்றம் எவ்வாறு விளக்குகிறது என்பது இசைத்துறை மற்றும் டிஜிட்டல் இசைத் தளங்களுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com