என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இன்னும் எனக்கு இசை தெரியாது, அதனால்தான் உழைக்கிறேன்- பத்மபாணி விருதுபெற்ற இளையராஜா பேச்சு
    X

    "இன்னும் எனக்கு இசை தெரியாது, அதனால்தான் உழைக்கிறேன்"- 'பத்மபாணி' விருதுபெற்ற இளையராஜா பேச்சு

    • நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை.
    • இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம்.

    மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற 11-வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான உயரிய 'பத்மபாணி விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆஸ்கார் வெற்றியாளர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

    பின்னர் இளையராஜா பேசியதாவது:-

    இந்த விழாவிற்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் எனது 1,541-வது படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துவிட்டு வந்தேன். நிறைய பேர் என்னிடம் எப்படி துல்லியமான பாடல்கள் மற்றும் மெட்டுகளை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்வது ஒன்றுதான். எனக்கு இன்னும் இசை தெரியாது. ஒருவேளை இசை முழுவதையும் கற்றுக்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நான் நினைத்திருந்தால், இந்த நேரம் வீட்டிலேயே முடங்கியிருப்பேன். கற்க வேண்டியவை இன்னும் இருப்பதால் தான் நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறேன்.

    நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை. இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம். ஆனால், நேரடி வாத்தியங்கள் (லைவ் ஆர்கஸ்ட்ரா) தரும் உணர்வை எந்திரங்களால் தர முடியாது. அதனால்தான் இன்றும் நான் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனித்தனியாக குறிப்புகளை(நோட்ஸ்) எழுதி, நேரடி இசையையே பதிவு செய்கிறேன் என்றார்.

    முன்னதாக நிகழ்ச்சி தொடக்கத்தில், விமான விபத்தில் மரணம் அடைந்த மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×