என் மலர்
சினிமா செய்திகள்

க்ராணி- திரைவிமர்சனம்
லண்டனில் இருந்து கிராமத்திருக்கு திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், தங்கள் மூதாதையர் வீட்டிற்குள் நுழையும் போது மயக்கமடைந்த ஒரு மர்மமான, வயதான வடிவுக்கரசியை காண்கிறார்கள். அவள் யார் என்று தெரியாமல் அவர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். சில நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. மேலும் அந்த தொழில் அதிபரின் இளம் குழந்தைகள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
இறுதியில் வீட்டில் அமானுஷ்ய விஷயம் நடக்க காரணம் என்ன? வடிவுக்கரசி யார்? குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவுக்கரசி, குறைந்த வசனங்களிலேயே பார்வை, உடல் மொழி மூலம் பயத்தை உருவாக்குகிறார். அவரது அமைதியான நடிப்பு தான் படத்தின் முக்கிய பலம். பல காட்சிகளில் அவர் தோன்றும் விதமே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இளம் தம்பதியினராக நடித்துள்ள ஆனந்த் நாக், அபர்ணா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் தவிக்கும் பெற்றோரின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகள் தொடர்பான காட்சிகள் கதைக்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. மற்ற கதாபாத்திரங்களான திலீபன், சிங்கம் புலி, கஜா ராஜா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
இயக்குனர் விஜய குமரன், அதிக ஜம்ப் ஸ்கேர் இல்லாமல் சூழல் ஹாரரை தேர்வு செய்துள்ளார். மெதுவாக நகரும் திரைக்கதை மூலம் பயத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார். முதல் பாதி நன்றாக அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் எதிர்பார்க்கக்கூடிய வகையில் நகரவில்லை.
இசை
செல்லையா பாண்டியனின் பின்னணி இசை ஹாரர் உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சில இடங்களில் இசை அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், மொத்தத்தில் படத்திற்கு உதவியாக இருக்கிறது.
ஒளிப்பதிவு
மணிகண்டனின் ஒளிப்பதிவு, பழைய வீட்டின் இருண்ட சூழலை அழகாக பதிவு செய்துள்ளது.
ரேட்டிங்- 2/5






