ஈகோ ராமன் விமர்சனம் (2.5 / 5)
தந்தையை இழந்த நாயகன் சிபி, தனது தாயின் கனவை நிறைவேற்ற அரசாங்க வேலைக்கு படித்து வருகிறார். இவர் ஒரு நாயை பாசமாக வளர்த்து வருகிறார். தன் தாய் ஆசையாக வாங்கிக் கொடுத்த பைக்குக்கு இஎம்ஐ கட்டாததால் பணம் கேட்டு பைனான்சியர் தொந்தரவு செய்கிறார்.
அதே ஊரில் தலைமை ஆசிரியராக இருக்கும் ரோபோ சங்கர், ஏற்றத் தாழ்வு பார்த்துக் கொண்டு ஈகோ உடன் இருக்கிறார். இவர் தனது பைக் மீது அதிக பிணைப்புடன் இருக்கிறார். ஒருநாள் இவர் பைக்கில் செல்லும் போது சிபியின் நாய் துரத்தி செல்கிறது. இதில் விபத்து ஏற்பட்டு பைக் உடைந்து போகிறது. இதனால் ஆத்திரம் அடையும் ரோபோ சங்கர், நாயை அடித்து கொன்று விடுகிறார்.
இது விஷயம் சிபிக்கு தெரிந்து கோபமாக ரோபோ சங்கரை தேடி செல்கிறார். ரோபோ சங்கரை பார்த்தவுடன், தன்னுடைய பள்ளி ஆசிரியர் என்று தெரிந்தவுடன் கோபத்தை விட்டு பழகுகிறார். ஆனால், ரோபோ சங்கர், சிபியை ஏளனமாக பார்க்கிறார். மேலும் ஒரு கட்டத்தில் சிபியின் பைக், ரோபோ சங்கர் கைக்கு மாறுகிறது.
இறுதியில் ரோபோ சங்கருக்கு சிபியின் பைக் எப்படி வந்தது? ரோபோ சங்கரிடம் இருந்து பைக்கை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிபி சந்திரன், இன்னும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கலாம். ஒரு சில இடங்களில் நடிப்பை வெளிப்படுத்தாமல் சாதாரணமாக கடந்து செல்கிறார். கதையின் நாயகனாக நடித்து இருக்கும் ரோபோ சங்கர், சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
அவரது உடல் மொழி, முகபாவனைகள் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கணேசன் நாச்சிமுத்து. அதிக ஈகோ உள்ள ஒருவர், என்ன செய்கிறார், அவரது மனநிலை எப்படி மாறுகிறது என்பதை திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை, தேவையில்லாத ஒரு சில காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார். கிராமத்து அழகு மாறாமல் ஒளிப்பதிவு அமைக்கப்பட்டுள்ளது.

