

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாபெரும் கலைஞர், 'இயக்குனர் இமயம்' என்று போற்றப்படும் பாரதிராஜா சமீபத்தில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்குத் தமிழக அரசு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்து கவுரவித்தது.
இந்நிலையில், பாரதிராஜாவின் அக்கா மகனும், பிரபல இயக்குனருமான மனோஜ்குமார், மாலைமலர் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பாரதிராஜாவின் கடைசி காலக் கஷ்டங்கள், குடும்பச் சிக்கல்கள் மற்றும் அவரது மகன் மனோஜின் மரணம் குறித்த பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த தகவல்களை பற்றி விரிவாக காணலாம்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய போது கூட பாரதிராஜாவுக்குச் சினிமாவின் மீதான தாகம் குறையவில்லை.
"எப்படியாவது இன்னும் ஒரு படம் டைரக்ட் பண்ணனும்டா... வீல்சேர்ல உட்கார்ந்தாவது ஒரு படம் டைரக்ட் பண்ணுவேன்" என்று பாரதிராஜா அடிக்கடி கூறுவாராம்.
சமீபத்தில் வெளியான படங்களைப் பார்த்துப் பாராட்டுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக, 'தாய்க்கிழவி' படத்தைப் பார்த்துவிட்டு நடிகை ராதிகாவை நேரில் அழைத்து, "இந்த படத்துக்கு உனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கணும்" என்று மனோஜ்குமார் முன்னிலையில் ஆசி வழங்கியுள்ளார்.
பாரதிராஜாவின் சினிமா நுணுக்கங்கள், குறிப்பாக படப்பிடிப்பின் போதே பின்னணி இசை எப்படி அமைய வேண்டும் என்பதைத் திட்டமிடும் அவரது அபாரமான எடிட்டிங் அறிவு குறித்து மனோஜ் விளக்கினார். இளையராஜாவுடன் அவருக்கு இருந்த நட்பு வெறும் தொழில்முறை சார்ந்தது மட்டுமல்ல, அது பல தசாப்த கால ஆழமான பிணைப்பு.
எஸ்பி பாலசுப்பிரமணியம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தது முதல், முதல் மரியாதை படத்தின் இசை உருவாக்கம் வரையிலான பல சுவாரசியமான நினைவுகளை மனோஜ் பகிர்ந்து கொண்டார்.
பாரதிராஜா தனது வாழ்நாளில் சம்பாதித்த 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைத் தனது மகன் மனோஜ் மற்றும் மகள் ஜனனி ஆகியோருக்குத் தனக்கு வாழ்நாளின் போதே சரிசமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார். டி.நகர் வீடு, ஜெமினி பார்சன் அப்பார்ட்மெண்ட், தேனாம்பேட்டை பில்டிங் போன்ற மதிப்புமிக்கப் பல சொத்துகள் மகன் மனோஜின் பெயரில்தான் இருந்தன.
இருப்பினும், தனது மகன் மனோஜை சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகப் பாரதிராஜா தீவிர முயற்சி எடுத்தார். தாஜ்மகால், அள்ளி அர்ஜுனா போன்ற படங்களைத் தயாரித்ததில் சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து, இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் இயக்குனராக அறிமுகமான 'மார்கழி திங்கள்' திரைப்படத்திலும் பாரதிராஜா ரூ.1 கோடி முதலீடு செய்தார். ஆனால், அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால், "அப்பா நமக்காக இவ்வளவு கோடிகளைச் செலவழித்தும் நம்மால் ஹீரோவாகவோ, இயக்குனராகவோ ஜெயிக்க முடியவில்லையே" என்று மகன் மனோஜ் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, அதுவே அவரது மரணத்திற்கும் ஒரு மறைமுகக் காரணமாக அமைந்தது என மனோஜ்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மகனின் மரணத்தால் பாரதிராஜா மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டார்.
பாரதிராஜாவுக்குப் பெரும் கடனை ஏற்படுத்தியது அவர் லண்டன், கனடா போன்ற வெளிநாடுகளில் சுழன்று சுழன்று எடுத்த 'ஓம்' திரைப்படம்தான். அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் அவருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது.
அவர் யாரிடமும் கையேந்த விரும்பாமல், சைதாப்பேட்டை LIC மற்றும் கோயம்பேடு IDBI வங்கிகளில் தனது சொத்துகளை அடமானம் வைத்துப் படம் எடுத்தார். இந்தக் கடன்களை அடைக்கத் தேனியில் இருந்த தனது ஸ்கூல் ப்ராப்பர்ட்டியை விற்று ஒரு பகுதி கடனை அடைத்தார்.
மருத்துவமனை கட்டணம் கட்டவும் சிரமம், மீதமுள்ள கடன்களை அடைப்பதற்காக நீலாங்கரையில் உள்ள 9 கிரவுண்ட் நிலத்தை விற்கப் பாரதிராஜாவும், மகன் மனோஜும் சேர்ந்து ஒரு பையரிடம் ஒப்பந்தம் செய்து ரூ.4.5 கோடி அட்வான்ஸ் வாங்கியிருந்தனர். ஆனால் அதற்குள் மகன் மனோஜ் திடீரென மரணமடைந்தார்.
மனோஜ் உயிரோடு இருந்தபோது பாரதிராஜா அனைத்து அசல் சொத்து ஆவணங்களையும் அவரிடம் பாதுகாப்பாகக் கொடுத்திருந்தார். மனோஜின் மறைவுக்குப் பின், அந்த டாக்குமெண்ட்டுகள் அனைத்தும் அவரது மனைவி நந்தனாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றன.
தற்போது, ஒப்பந்தம் செய்த மீதிப் பணத்தைப் பெற்று பாரதிராஜாவின் கடனை முழுமையாக அடைக்க நந்தனாவிடம் டாக்குமெண்ட்டுகளைக் கேட்டபோது, அவர் தர மறுப்பதாக மனோஜ்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
"இவ்வளவு பெரிய வெற்றிகளைக் கொடுத்த ஒரு மாபெரும் கலைஞருக்குக் கடைசி காலத்தில் ஹாஸ்பிட்டல்ல பணம் கட்டுறதுல கூட கொஞ்சம் பிரச்சனை வந்துடுச்சு. நந்தனாவுக்குக் கணவரை இழந்துட்டோம், பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற பயம் இருப்பது நியாயம் தான். ஆனால், யாரோ பின்னணியில் இருந்து அவளை இயக்குகிறார்கள்" என்று மனோஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
தான் வாங்கிய கடனைத் தனது கண் முன்னாடியே அடைக்க முடியவில்லையே, தன் சொல்லுக்குத் தன் குடும்பத்திலேயே மதிப்பு இல்லையோ என்ற மாபெரும் மன வருத்தத்துடனேயே 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா கடனாளியாகவே கண் மூடினார் என்று கண்ணீருடன் இந்த நேர்காணலை நிறைவு செய்துள்ளார் இயக்குனர் மனோஜ்குமார்.