நடிகரும், திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்

73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
Director Bhagyaraj
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் இன்று திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

பாக்யராஜ், நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோருடன் வசித்து வந்தார். இன்று காலை அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் காலை 7 மணி அளவில் மரணம் அடைந்தார்.

அதிர்ச்சி

தமிழ் திரை உலகில் திரைக்கதை மன்னன் என போற்றப்பட்டு வந்த கே.பாக்யராஜின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மரணம் அடைந்த பாரதிராஜா உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது கூட பாக்யராஜ் ஆரோக்கியமாகவே காணப்பட்டார். எப்போதும் போல தனது பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மகன்-மகள்

பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா. அவர் 1983-ம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயினால் மரணம் அடைந்தார். இதன் பிறகு பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்து உள்ளனர். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. திரையுலகிலும் குடும்ப வாழ்க்கையிலும் இந்த ஜோடி ஒற்றுமையுடன் பிரியாமல் வாழ்ந்து வந்தது.

மகன் சாந்தனு கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது மருமகள் கீர்த்தி. பிரபல தொகுப்பாளினியான இவர் ‘கீகீ’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

பாக்யராஜின் மகள் சரண்யா, பாரிஜாதம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

திரைக்கதை மன்னன்

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்கள் என்றாலே பாக்யராஜின் பெயர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தனது அனைத்து படங்களிலும் எளிமையான கதை களை நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் வெளிப்படுத்தி இருப்பார். தனித்துவமான திரைக்க தையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து இருந்தார்.

தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக, பல தசாப்தங்களாக சினிமாவில் கோலோச்சி முத்திரை பதித்தவர்.

16 வயதினிலே

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தில் நாட்டு வைத்தியராக சிறிய கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடித்தார். தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தார். தொடர்ந்து ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் 2 முக்கிய காட்சி களில் தோன்றிய பாக்யராஜ் அந்த படத்திற்கு வசனமும் எழுதி இருந்தார். இந்த வசனங்கள் அப்போது பேசுபொருளாக மாறி இருந்தன.

கதாநாயகன்

‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக பாரதிராஜா அறிமுகம் செய்தார். கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி, குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். ராஜேஷ், வடிவுக்கரசி நடித்த ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் திரைக்கதை, வசனம் எழுதி வில்லனாகவும் நடித்து இருந்தார்.

‘ஒரு கை ஓசை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்த கே.பாக்யராஜ். படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

மவுன கீதங்கள்

அவர் இயக்கிய மவுன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா ஆகிய படங்கள் பாக்யராஜின் முழுத் திறமையையும் வெளிக் காட்டிய படங்களாக அமைந்து இருந்தன.

‘இது நம்ம ஆளு’ படத்தில் இசை அமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘நான் ஆளான தாமரை’, ‘அம்மாடி இதுதான் காதலா’, ‘காமதேவன் ஆலயம்’ போன்ற அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ஆனது. தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தார்.

ஒரு கைதியின் டைரி படத்தின் இந்தி பதிப்பில் அமிதாப்பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகிற பொறுப்பை பாக்யராஜ் பெற்றார். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான இந்த படம் பாக்யராஜ் இயக்கிய முதல் இந்தி படமாகும்.

இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒரியா என பல மொழிகளில் இவரது கதைகள் சினிமாவாக தயாரிக்கப்பட்டு உள்ளன.

கொங்கு மண்டலம்

கே.பாக்யராஜ் 1951-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோவில் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். தந்தை பெயர் கிருஷ்ணசாமி. தாய் அமராவதி. சிறுவயதில் சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து தனது தனித்திறமையால் தமிழ் திரை உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கே.பாக்யராஜ் மரணம் அடைந்து இருப்பது அவரது குடும்பத்தினர், தமிழ் திரை உலகினர் ஆகியோரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.

அஞ்சலி

பாக்யராஜ் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுடன் ஆம்புலன்சில் நடிகை ராதிகா சென்றார்.

பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள்

பாக்யராஜ் உடலுக்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர்கள் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பாண்டியராஜன், விக்ரம் பிரபு, ஜெயராம், சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், மன்சூர் அலிகான், நடிகைகள் சுஹாசினி, சி.ஆர்.சரஸ்வதி, டைரக்டர்கள் மணிரத்னம், ஆர்.சுந்தரராஜன், விஜய், சந்தான பாரதி, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாளை தகனம்

பாக்யராஜின் உடலுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் இறுதி சடங்கு நடக்கிறது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com