

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான முத்தையா - லலிதா இணை பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசியதாவது:-
தாரே ஜமீன் பர் படத்தில் வரும் சிறுவனின் இன்னொரு வெர்ஷன் தான்நான். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் வரும். இந்த மேடைக்கு வரக் காரணம் புத்தகம் அல்ல. அந்தப் புத்தகத்தை எழுதிய நபர்தான் காரணம்.
ஏன் அவருக்காக நான் வருகிறேன் என்றால், உடன்பிறந்த சகோதரி தொகுத்து வழங்கப் புத்தகத்தைப் பெற்றோர் இருவரும் வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இருக்கு இல்லையா, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சுட்டான் என்கிற தருணம் அது.
தன்னை இந்தச் சமூகம் ஒத்துக் கொண்டதுன்னு சொல்ற இடம் இருக்கில்லையா, அதைத் தன் குடும்பத்தார்க்கு உணர்த்தும் இடமிருக்கில்லையா, இந்த மாதிரி யார் விழா எடுத்தாலும் அந்த விழாவிற்குப் போவது என் வழக்கம்.
காரணம் எனக்கு இப்படியொரு விழா நடக்கவே இல்லை. நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய எந்தப் படத்திற்கும் வெற்றி விழா நடந்ததில்லை. என் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என் குடும்பத்தினர் வந்ததில்லை. அதனால் தான் யாராவது தன் உறவுகளோடு, ஒரு ஆளாகியிருக்கிறேன் என நிற்கும்பொழுது பக்கத்தில் நிற்க வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன்.
இதை விட பெரிய வெற்றி என்ன ஒரு மனிதன் அடைந்து விட முடியும்? ஜெகன் கவிராஜின் பெற்றோர் சென்னைக்கு வந்து முதல் முறையாக இப்படியொரு அரங்கில் மகனைப் பார்க்கிறார்கள் என்றால், இதுதான் ஒரு மனிதன் அடைந்த உயரம்.
திருநெல்வேலி பக்கத்தில் பூலாங்குளம் எனும் கிராமத்தில், டீக்கடையும் விவசாயமும் பார்த்த பெற்றோர்கள் ஆறாவதோடு படிப்பை நிறுத்தி பீடி பிடித்துக் கொண்டிருந்த ஜெகன், ஏதோ ஒரு மில்லில் போய் வேலை பார்க்க, பதினாறு வயசில் இப்படியிருந்தா கெட்டுப் போயிடுவான்னு உறவினர்கள் சேர்ந்து காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க.
காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரத்திலும், பின் கேரளாவுக்குப் போய் மண்ணு சுமக்கிற வேலை பார்த்திருக்கார். திருச்சியில தெரு தெருவாகப் போய் பாத்திர வியாபாரம் பார்க்கிறார். பழைய புத்தகக் கடையில் எடைக்குப் புத்தகம் போடுவாங்க இல்ல, அதுல வர்ற புத்தகங்களைப் படிச்சு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் தான் இவரை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு.
அதன் பின், ஏக இறைவனை வழிபடும் முற்போக்கான சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் கொண்ட அய்யா வழில நுழைகிறார். சென்னைக்கு வந்து வெற்றிவேந்தன் ஆஃபீஸ்ல வேலை செய்து, அவங்க கம்பெனி எடுத்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் கடைசி அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து, அந்த கம்பெனியிலேயே கேஷியராக வேலை பார்த்து, அதன்பின் பாட்டெழுதி, அப்புறம் மீடியாவிற்குள் வந்து, அப்புறம் ‘ஜீரக பிரியாணி’ பாடல், தாய்க்கிழவி படத்தில் பாட்டெழுதி, இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படத்துக்குப் பாட்டு எழுதி, ஒரு புத்தகம் எழுதி சென்னையில் பெரிய வெளியீட்டு விழா நடத்துறார்.
இந்த மாதிரியான ஆட்களைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெகனின் சிந்தனைக்கும், எண்ணத்துக்கும், அவர் சந்தித்த மனிதர்களையும், அவரது வட்டாரக் கதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
இவ்வாறு அவர் கூறினார்.