Blast செய்ததா அர்ஜூனின் ‘பிளாஸ்ட்’ திரைப்படம்? - திரைவிமர்சனம்

Blast செய்ததா அர்ஜூனின் ‘பிளாஸ்ட்’ திரைப்படம்? - திரைவிமர்சனம்

அர்ஜூன் நடித்துள்ள பிளாஸ்ட் படத்தின் திரைவிமர்சனம்
Published on
பிளாஸ்ட் விமர்சனம் (3 / 5)

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதில் இருந்தே பயமில்லாத பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண் யாருடைய துணையையும் எதிர்பார்க்கக் கூடாது” என்பதையே வாழ்க்கைப் பாடமாக சொல்லிக்கொடுத்து வளர்ப்பதால், எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக்கேட்கும் குணத்துடன் வளர்கிறார் ப்ரீத்தி. தனக்காக மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்காகவும் சண்டை போட தயங்காத கதாபாத்திரமாக அவர் வருகிறார்.

இதனால் எப்போது வேண்டுமானாலும் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்வாரோ என்ற பயத்தில் இருக்கிறார் தாய் அபிராமி. இது ஒரு பக்கம் நகர, இன்னொரு பக்கம் பெரிய கனிம வளங்களை கைப்பற்ற ஒரு முழு கிராமத்தையே அழிக்க திட்டமிடும் வில்லன் குரூப் களமிறங்குகிறது. ஆயிரக்கணக்கான கோடி பணம், அரசியல் பின்னணி, இவை எல்லாம் சேர்ந்த அந்த பிரச்சனையில் எதிர்பாராத விதமாக அர்ஜுன் குடும்பம் சிக்கிக்கொள்கிறது.

இறுதியில் அர்ஜுன் குடும்பம் என்ன ஆனது? அந்த பிரச்சனையில் அர்ஜுன் குடும்பம் எப்படி சிக்கியது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டும் சுறுசுறுப்பு சிறப்பு. கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார்.

இவருக்கு நிகராக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். கவர்ச்சி நாயகியாக பார்த்தவர்களை இந்த படம் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும். ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டும் உடல் மொழி அபாரம். அதேபோல் அபிராமியும் பல இடங்களில் மாஸ் காட்டுகிறார். அர்ஜுன் சிதம்பரத்துக்கும் நல்ல ஸ்கோர் கிடைத்திருக்கிறது. அவரது நடிப்பு பல இடங்களில் கவனம் ஈர்க்கிறது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் முதல் படத்திலேயே நல்ல தன்னம்பிக்கை காட்டியிருக்கிறார். குடும்ப உணர்வுகளையும், ஸ்டைலான சண்டைக் காட்சிகளையும் சமநிலைப்படுத்தி ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் சில இடங்களில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க வேகத்துடன் செல்கிறது. குறிப்பாக கேமரா நகர்வுகள், எதிர்பாராத தருணங்கள், சண்டைக் காட்சிகளை வடிவமைத்த விதம் ஆகியவை ரசிகர்களை படம் முழுக்க ஈர்த்துக் கொண்டே செல்கின்றன.

சண்டை காட்சிகளை தாண்டி, பெண்கள் அதிகாரமளித்தல் பற்றியும் படம் பேசுகிறது. பெண்களிடம் தவறாக நடக்க நினைப்பவர்களுக்கு எதிராக நிற்க வேண்டும், அநியாயம் யாருக்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க வேண்டும் என்று படம் சொல்லும் விஷயங்கள் நல்ல தாக்கத்தை கொடுக்கிறது.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிக்கு கை கொடுத்து இருக்கிறது. சில இடங்களில் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com