

'ஆதித்யா வர்மா', 'மகான்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, நடிகர் துருவ் விக்ரமின் அடுத்த 4வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
முழுக்க முழுக்க கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே துருவ் விக்ரமின் முதல் படமான 'ஆதித்யா வர்மா' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தங்களது 4வது தமிழ் தயாரிப்பாக இத்திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
சமீபத்தில் 'கட்சி சேர' பாடல் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற சாய் அபியங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பிருத்வி பாண்டியராஜன் மற்றும் சாய் தீனா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர், முக்கியத் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
முற்றிலும் மாறுபட்ட ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் கதைகளத்தில் இந்த புதிய படத்தின் மூலம் களம் இறங்கவுள்ளதால் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் இப்படத்தின் பிரத்யேக புரோமோ ஷூட் தொடங்கவிருப்பதாகப் படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.