Dark Movie review

டார்க்- திரை விமர்சனம்

மனு ரமேஷ் இசையில் பின்னணி இசை திகில் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
Published on
டார்க்- விமர்சனம்(3.5 / 5)

கதை

மூன்று இளைஞர்கள் வசித்த வீட்டில் நடக்கும் கொடூரமான கொலை மற்றும் தற்கொலை சம்பவத்திற்குப் பிறகு, அந்த வீடு பேய் வீடு என்ற பெயரைப் பெறுகிறது.

பல ஆண்டுகள் யாரும் குடியேறாத அந்த வீட்டில், குறைந்த வாடகைக்காக உண்மை தெரிந்தும் குடியேறுகிறார் நாயகன் அஜய் கார்த்திக். ஆரம்பத்தில் தைரியமாக இருக்கும் அவர், நாளடைவில் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்.

அந்த சூழலில் மர்மமான முறையில் அஜய் கார்த்திக்கும், வீட்டு உரிமையாளரான பாக்யராஜும் உயிரிழக்கிறார்கள். விசாரணைக்காக வரும் காவல்துறை அதிகாரி நட்டி, இறந்து போனதாக நினைக்கப்பட்ட அஜய் கார்த்திக் திடீரென கண் திறந்து பேசும் சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். அந்த ஒரு நொடியில் தொடங்கும் விசாரணை, பல ஆண்டுகளாக மறைந்து கிடந்த மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

இறுதியில் அந்த வீட்டின் உண்மை என்ன?, அங்கு நடந்த கொலைகளின் பின்னணி என்ன?, அமானுஷ்யமாக தெரியும் சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக், ஆரம்பத்தில் சாதாரண இளைஞராக அறிமுகமாகி, அமானுஷ்ய சம்பவங்களால் மனநிலை மாறும் மனிதராக படிப்படியாக மாறும் விதத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பயம், குழப்பம், பதற்றம் போன்ற உணர்வுகளை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருப்பது அவரது நடிப்புக்கு பலம் சேர்க்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, வழக்கமான விசாரணை அதிகாரியாக இல்லாமல், ஒவ்வொரு தகவலையும் பொறுமையாக ஆராயும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும் தனது அனுபவமான நடிப்பால் காட்சிகளுக்கு எடை சேர்த்திருக்கிறார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

இயக்கம்

வழக்கமான பேய் கதையை இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், திகில் பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். கதையின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து விடும் அவர், இறுதி வரை சஸ்பென்ஸை உடைக்காமல் நகர்த்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் சந்தேகம் வரும்படி திரைக்கதையை அமைத்து, கிளைமாக்ஸில் அதற்கான விளக்கத்தை அளித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.

ஒரே வீட்டை மையமாகக் கொண்டு கதை நகர்வதும், சில லாஜிக் மீறல்களும் சிறிய குறையாக தெரிந்தாலும், திகில் காட்சிகளின் தாக்கமும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த குறைகளை மறைத்துவிடுகிறது. பேயை அதிகமாக காட்டாமல், மனிதர்களின் மனநிலையை வைத்து பயத்தை உருவாக்கியிருப்பது படத்திற்கு தனித்துவம் சேர்க்கிறது.

ஔிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டை மையமாகக் கொண்ட கதையை காட்சியமைப்பால் சலிப்பில்லாமல் மாற்றியிருக்கிறார்.

இசை

மனு ரமேஷ் இசையில் பின்னணி இசை திகில் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com