

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் மற்றும் நடிகர் ராம் சரண் உள்ளிட்ட மெகா குடும்ப உறுப்பினர்களைக் கிண்டல் செய்ததாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞர் அனுதீப் கடிகலா ஆந்திரப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த அனுதீப்பை, ஆந்திர மாநில காக்கிநாடா போலீசார் நேற்று கைது செய்தனர். முதலில் பிரயாக்ராஜில் உள்ள ஒரு உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ரயில் மூலம் காக்கிநாடாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற "தி டோலிவுட் ரோஸ்ட் ஷோ" என்ற நிகழ்ச்சியில், பவன் கல்யாணின் விவாகரத்துக்கள் மற்றும் ராம் சரணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் கிண்டலாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அனுதீப்பின் கருத்துக்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாகவும் இருப்பதாகக் கூறி ஜனசேனா கட்சியின் உறுப்பினர் படே வெங்கட கிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் மீது அவதூறு பரப்புதல், ஆபாசமான கருத்துக்களை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி பட்டதாரியாக இருந்து ஸ்டாண்டப் காமெடியனாக மாறிய அனுதீப் கடிகலா, ஹைதராபாத்தில் தெலுங்கு ஸ்டாண்ட்-அப் காமெடி கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்தியாவின் முதல் தெலுங்கு ஸ்டாண்ட்-அப் காமெடி கூட்டமைப்பான 'சில்லி சவுத் காமெடி' என்ற குழுவையும் நிறுவினார்.