கார் மேனி செல்வம்- விமர்சனம்

கார் மேனி செல்வம்- விமர்சனம்

நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தையும், கடன் சுமையையும், குடும்ப பொறுப்புகளையும் எளிமையாக சொல்லும் ஒரு உணர்ச்சி பூர்வமான படம்.
Published on
கார் மேனி செல்வம்- விமர்சனம்(2.5 / 5)

சிறிய வீட்டில் வாழும் சமுத்திரக்கனி, பணக்காரர் கௌதம் மேனனிடம் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். எப்படியாவது பணம் சம்பாதித்து மேலே வர வேண்டும் என்று நினைக்கும் மனைவி லட்சுமி பிரியாவின் தூண்டுதலால், பல வழிகளில் சம்பாதிக்க முயற்சி செய்யும் சமுத்திரக்கனி, எதிர்பாராத சூழ்நிலைகளால் கடன் சுமையில் சிக்கிக் கொள்கிறார்.

கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்கிறார் சமுத்திரகனி. அங்கு குடும்பத்தை பற்றி நினைத்து மீண்டும் ஊருக்கு திரும்ப நினைக்கிறார். ஆனால் திரும்பி வரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இறுதியில் சமுத்திரகனி சொந்த ஊருக்கு திரும்பினாரா? கடன் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சமுத்திரக்கனி, அமைதியான, உடைந்த மனநிலையுடன் போராடும் குடும்பத் தலைவனாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் மிகைப்படுத்தாமல், தன் கதாபாத்திரத்தை கட்டுப்பாட்டுடன் கொண்டு சென்றிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். பல காட்சிகளில் அவரது நடிப்பு மனதை தொட்டுச் செல்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா, ஒரு நடுத்தர குடும்ப மனைவியாக உண்மையிலேயே வாழ்ந்திருக்கிறார். கணவன்-மனைவி இடையிலான அன்றாட உரையாடல்கள் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. இவர்களின் மகனாக வரும் சிறுவனும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

கௌதம் மேனன், எளிமையான பணக்காரராக கவர்கிறார். அவருடைய பாத்திரம் கதைக்கு ஒரு சமநிலையை கொடுக்கிறது. மற்ற துணை கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான அளவில் உதவியிருக்கிறார்கள்.

இயக்குநர்

நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தையும், கடன் சுமையையும், குடும்ப பொறுப்புகளையும் எளிமையாக சொல்லும் ஒரு உணர்ச்சி பூர்வமான படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராம் சக்ரி. படத்தின் காட்சியமைப்பு  சினிமா என்று தோன்றாமல், நம்மை சுற்றி நடக்கும் வாழ்க்கையைப் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.

கமர்ஷியல் அம்சங்களை விட, கதைக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தின் சிறப்பு. பெரிய திருப்பங்கள் இல்லாமல் மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவினம்.

ஒளிப்பதிவு

யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் பின்னணி இசை கதையோடு பயணித்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com