

தமிழ் சினிமாவின் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், அவரது குடும்பத்தில் சொத்து மற்றும் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
இதுகுறித்து, பாரதிராஜாவின் சொந்த மைத்துனர் ஊடகங்களுக்கு முதன்முறையாக விரிவான விளக்கமளித்துள்ளார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ள உண்மை கருத்துகளை விரிவாகப் பார்க்கலாம்.
ஊடகங்களில் பரப்பப்படும் ரூ.1000 கோடி சொத்து என்ற செய்தி முற்றிலும் வதந்தி என அவர் மறுத்துள்ளார் பாரதிராஜா தன் பிள்ளைகளுக்கு ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகளை எழுதி வைத்துள்ளார் என்பது உண்மைதான்.
இருப்பினும், தற்போதைய சூழலில் பாரதிராஜாவின் முக்கிய சொத்துகளான நாயுடுகால் கட்டிடம் மற்றும் பிரிக் இன்ஸ்டிடியூட் ஆகிய இரண்டு முக்கிய சொத்துகளும் கடன் சுமை காரணமாக எல்.ஐ.சி மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகளில் இன்னும் அட்டாச்மென்ட்டில் உள்ளன.
"இந்தக் கடன்களை முழுமையாக அடைத்து, பத்திரங்களை மீட்டெடுத்த பின்புதான் எஞ்சிய சொத்துகளை மனோஜ் குடும்பத்திற்கும், தங்கை ஜனனிக்கும் முறைப்படி பிரித்துக் கொடுக்க முடியும். அதுவரை சொத்துகளைப் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கும்" என்று அவர் கூறினார்.
பாரதிராஜா தன் மகன் மறைந்த மனோஜின் குடும்பம் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று முக்கிய சொத்துகளை ஆரம்பத்திலேயே எழுதி வைத்திருந்தார். இதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.6 லட்சத்திற்கும் மேல் நிலையான வாடகை வருமானம் கிடைத்து வந்தது.
இதில், டி.நகர் சொத்து மாத வாடகை ரூ.3.5 லட்சமும், ஜெமினி சொத்து மாத வாடகை ரூ.6,000 மற்றும் பிரிக் இன்ஸ்டிடியூட் தளம் மாத வாடகை ரூ.2.25 லட்சம் கிடைத்து வந்தது. இவ்வளவு வசதிகள் இருந்தும், பாரதிராஜாவின் மூன்று ஆண்டுகால மருத்துவப் போராட்டத்தின் போது, மருமகள் தரப்பிலிருந்து போதிய நிதி உதவியோ அல்லது கவனிப்போ வழங்கப்படவில்லை.
மாறாக, மகள் ஜனனி தனக்குக் கிடைத்த வெறும் ரூ.1.5 லட்சம் வருமானத்தை வைத்துக் கொண்டு, வீட்டில் இரண்டு செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து அவரைப் பராமரித்து வந்தார்.
பாரதிராஜாவின் கடன்களையும், மருத்துவச் செலவுகளையும் அடைக்க அவசரமாகச் சொத்து ஆவணங்களைக் கேட்டபோது, மருமகள் நந்தனா அதைத் தர மறுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதற்காக, தேனியில் உள்ள தும்மளப்பட்டி பூர்வீகச் சீதனச் சொத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு பாரதிராஜாவின் மனைவி தள்ளப்பட்டார்.
தேனியில் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நடந்த போது, உடலுக்கு அருகில் சொத்துகாகச் சண்டை நடந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இறுதிச் சடங்கின் போது ஜனனி கோபமடைந்ததற்கான பின்னணியை அவர் தெளிவுபடுத்தினார்.
பாரதிராஜாவின் உடலுக்குத் தமிழக அரசின் முழு அரசு மரியாதை செலுத்தப்படவிருந்தது. மாலை 4:30 மணிக்குள் மார்ச் பாஸ்ட், அமைச்சர்கள் மலர்வளையம் வைத்தல் உள்ளிட்ட அனைத்துச் சடங்குகளும் முடிக்கப்பட வேண்டும் என்று கலெக்டரும், எஸ்.பி-யும் கடுமையான காலக்கெடு விதித்திருந்தனர். இதற்காக இறுதிச் சடங்குகள் சரியாக மதியம் 3:00 மணிக்கு தொடங்கப்பட வேண்டும்.
சடங்கில் மிக முக்கிய நிகழ்வான நீர்மாலை எடுக்கும் சடங்கை மனோஜின் மகள்கள் (பேத்திகள்) தான் செய்ய வேண்டும். இதற்காகப் பலமுறை போன் செய்து அவசரமாக வரச் சொல்லியும், வழி தெரியவில்லை என்று கூறி மருமகள் நந்தனா பேத்திகளுடன் மதியம் 2:45 மணிக்குக் காலதாமதமாகவே வந்து சேர்ந்தார்.
பாரதிராஜா மருத்துவமனையில் இருந்தபோது பார்க்க வராதது, சென்னையில் அவர் இறந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்தபோது வீட்டில் இல்லாதது, கடனை அடைக்க ஆவணங்களைத் தராமல் தாமதப்படுத்தியது மற்றும் இறுதிச் சடங்கிற்கும் பேத்திகளைத் தாமதமாக அழைத்து வந்து அரசு மரியாதைக்குச் சிக்கல் ஏற்படுத்தியது போன்ற காரணங்களால், எல்லையற்ற துக்கத்திலிருந்த ஜனனி அங்கு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டார்.
பாரதிராஜாவின் இறுதி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று அவரது மைத்துனர் மனோஜ்குமார் வருத்தத்துடன் தெரிவித்தார். உடல்நலம் குன்றிய நிலையிலும், "வீல் சேரிலிருந்தாவது நான் ஆசைப்பட்ட அந்தக் கடைசிப் படத்தை இயக்கியே தீருவேன்" என்று பாரதிராஜா உறுதியாக இருந்தார்.
படுக்கையிலிருந்தபடியே ஒரு உதவி இயக்குநரை அழைத்து அதற்கான கதையையும் அவர் எழுதி வைத்தார். ஆனால் அதற்குள் இயற்கை அவரை முந்திக் கொண்டது.
திரையுலகில் பாண்டியன் போன்ற எத்தனையோ நபர்களை அழைத்து வந்து பாரதிராஜாவால் ஸ்டார் ஆக்க முடிந்தது. ஆனால், தன் சொந்த மகனை வைத்து நான்கு படங்கள் எடுத்தும் திரையுலகில் அவனால் பெரிய நிலைக்கு வர முடியவில்லையே என்ற ஒரு தீராத வருத்தம் பாரதிராஜாவுக்குள் எப்போதும் இருந்தது.
நிழல்கள் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்து, பாரதிராஜா ஒட்டுமொத்தமாகப் பணத்தை இழந்து மனமுடைந்து போயிருந்தார் . அந்த இக்கட்டான காலகட்டத்தில், கங்கை அமரன்தான் அவருக்கு அத்தியாவசியத் தேவைகளைச் செய்து, ஆறுதல் கூறி, மன அமைதிக்காக அவரைச் சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.
பாரதிராஜாவுக்கும் இயக்குநர் மணிவண்ணனுக்கும் இடையே இருந்த நட்பிற்கு ஒரு சிறந்த உதாரணத்தைப் பகிர்ந்தார். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஆறுமுகம் வளர்த்த ஒரு பெண்ணை (செங்கமலம்) மணிவண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்க பாரதிராஜா விரும்பினார்.
அந்தப் பெண் யார், அவளது பின்னணி என்ன என்று கூடக் கேட்காமல், "பாரதிராஜா சார் சொல்லிட்டார், அது போதும்" என்று கூறி மணிவண்ணன் அடுத்த முகூர்த்தத்திலேயே அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பாரதிராஜா போன்ற மாபெரும் கலைஞனின் குடும்பத்தாரை ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பி கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும், குடும்பத்திற்குள் ஏற்பட்ட எமோஷனல் வாக்குவாதங்களைச் சொத்துச் சண்டையாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் அவரது மைத்துனர் கோரிக்கை விடுத்துள்ளார்.