

மஞ்சுமல் பாய்ஸ் வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ளப் படம் ‘பாலன்: தி பாய்’. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
மே.12 முதல் 23வரை 79வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில் 14ம் தேதி இப்படம் திரையிடப்பட உள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் சிதம்பரம் கூறியுள்ளதாவது;
"‘பாலன்: தி பாய்’ என்பது நமக்குத் தெரியாமலேயே நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் விஷயங்களைப் பற்றியது. நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதன் பாரம், மற்றும் நமக்குரிய இடத்தைக் கண்டறியும் தாகம். யாரெல்லாம் இந்த இரண்டு உணர்வுகளையும் ஆழமாக உணர்ந்து, அவற்றை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தார்களோ, அவர்களுக்காகவே இந்தத் திரைப்படத்தை நான் உருவாக்கினேன்.
அத்தகைய உண்மைகளைத் தாங்கி நிற்கும் சினிமாவை நம்பும் ரசிகர்களுக்கு, கேன்ஸ் (Cannes) எப்போதுமே ஒரு புகலிடமாக இருந்து வந்திருக்கிறது.” என தெரிவித்தார்.
இப்படத்தின் நடிகர்கள், வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், டோவினோ தாமஸ் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.