

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015 இல் வெளியான அதிபிரமாண்ட வரலாற்று புனைவு திரைப்படம் பாகுபலி.
பாகுபலியாக பிரபாஸ், பல்வால் தேவனாக ராணா டகுபதி, தேவசேனாவாக அனுஷ்கா ஷெட்டி, அவந்திகாவாக தமன்னா, சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக சத்யராஜ் என படத்தில் நடித்த ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மறக்க முடியாதவையாக மாறின.
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் ரூ.2500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து 2017 இல் இதன் இரண்டாம் பாகமாக வெளியாகி முதல் பாகம் போலவே அதிரிபுதிரி ஹிட் ஆனது.
இவ்விரு பாகுபலி பாகங்களும் உலக அரங்கில் இந்திய சினிமாவின் பிரமாண்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. தொடர்ந்து 2025 இல் முதல் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து பாகுபலி - தி எபிக், திரையரங்குகளில் வெளியாகியது.
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் படப்பிடிப்பு சுமார் 5 ஆண்டுகள் வரை நடந்தது.
படப்பிடிப்புபின் போதான அனுபவங்கள், கலைஞர்கள் பெற்ற படிப்பினைகள், படமாக்கலில் இருந்த சவால்கள் குறித்து படக்குழுவினர் நீண்ட ஆண்டுகள் பின் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஆவணத் தொடர் ஒன்று தயாராகி உள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் பாகுபலி - தி டார்ச்பியரர் என்ற அந்த ஆவண தொடர் இன்று வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஒன்றாக அமர்ந்து பேசிய ஒரு கிளிப் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் ராணா, " உலகம் இன்னும் அதற்கு தயாராக வில்லை. ஆனால் பாகுபலி....." என சஸ்பென்ஸ் வைக்க, பிரபாஸ் சிரித்தபடி தனது கையின் 3 விரல்களை நீட்டி கையை உயர்த்த அவரை தடுத்து அனுஷ்காவும், ராணாவும் சிரிக்கின்றனர். பாகுபலியின் பாரம்பரியம் தொடரும் என்பதுடன் அந்த வீடியோ கிளிப் நிறைவடைகிறது.
இதன்மூலம் பாகுபலியின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து ராஜமௌலியின் அறிவிப்புக்கு பலரும் காத்திருக்க தொடங்கியுள்ளனர். ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் வாரணாசி என்ற படத்தை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.