"உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்!" - ‘கான் சிட்டி’ படத்தை பார்த்து அர்ஜுன் தாஸை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

எனது சகோதரரும், வழிகாட்டியும், என் குடும்பத்தில் ஒருவருமானவரை கான்சிட்டி படத்தைப் பார்க்க வைத்தேன்.
Arjun Das - Lokesh Kanagaraj
Published on

அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் ஜூன் 26 அன்று வெளியான 'கான் சிட்டி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தனது 'கைதி' பட நாயகன் அர்ஜுன் தாஸை மனதாரப் பாராட்டியுள்ளார்.

நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ்..

லோகேஷ் கனகராஜ் தனக்குக் கொடுத்த பாராட்டுக்கள் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"எனது சகோதரரும், வழிகாட்டியும், என் குடும்பத்தில் ஒருவருமானவரை கான்சிட்டி படத்தைப் பார்க்க வைத்தேன்.

அவருக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது; குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து எனது படத்தைப் பார்ப்பது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நான் அவரைப் பெருமைப்படுத்தியதாக அவர் கூறியதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இதைவிடச் சிறந்ததொரு விஷயம் வேறென்ன இருக்க முடியும்? எனக்குத் திரையுலகில் முதல் வாய்ப்பை வழங்கியவர் இன்று இத்தகைய வார்த்தைகளைக் கூறுவது வரை, இந்தத் தருணம் எனக்கு மிகவும் முக்கியமானது.மிக்க நன்றி மச்சி, லோகேஷ் கனகராஜ் இந்தப் படம் உங்களுக்கானது, இது உங்களுக்காகவே உருவானது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியப் பின்னணி..

கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படத்தில் 'அன்பு' என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் லோகேஷின் 'மாஸ்டர்' (2021) மற்றும் 'விக்ரம்' (2022) ஆகிய திரைப்படங்களிலும் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கான் சிட்டி விபரம்..

ஒரு பண விவகாரத்திற்காக அர்ஜுன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் அடங்கிய ஒரு விசித்திரமான கும்பல் நடத்தும் ஏமாற்று வேலைகளை மையமாகக் கொண்டு இந்த நகைச்சுவைத் திரைப்படம் உருவாகியுள்ளது. இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மறுபுறம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகும் 'DC' படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், லோகேஷ் தனது அடுத்த இயக்கமாக அல்லு அர்ஜுன் நடிக்கும் 'AA23' திரைப்படத்திற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com