கோபத்தை ஏற்படுத்திய அனன்யா பாண்டேவின் பரதநாட்டியம்! கொந்தளித்த இணையவாசிகள்!

பாரம்பரிய கலையை அவமதிக்க வேண்டாம்" என காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமது விமர்சனம்.
கோபத்தை ஏற்படுத்திய அனன்யா பாண்டேவின் பரதநாட்டியம்! கொந்தளித்த இணையவாசிகள்!
Published on

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிப்பில் வெளியாகியுள்ள ‘சந்த் மேரா தில்’ திரைப்படத்தில், அவர் ஆடியுள்ள ஃபியூஷன் பரதநாட்டிய நடனம் சமூக வலைத்தளங்களில் கடுமையான கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது அனன்யாவின் நடனத்தை விமர்சித்துள்ளார்.

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்த்துள்ள ஷாமா முகமது, "எனக்கு மிகவும் பிடித்த பரதநாட்டிய நடனக் கலையை அனன்யா பாண்டே கொலை செய்துவிட்டார்!. நான் 7 வயது முதல் 13 வயது வரை பரதநாட்டியக் கலையை கற்று வந்தேன்.

பிறகு குவைத்தில் எனது அரங்கேற்றத்தை நடத்தினேன். பாரம்பரிய நடனம் என்பது முழுமனதுடன் ஏற்று விருப்பத்தோடு மட்டுமில்லாமல் பல வருட உழைப்பால் மட்டுமே வரக்கூடியது.

அப்படிப்பட்ட கலையை அனன்யா பாண்டே போன்றவர்களுக்காக உடனே கற்றுக்கொடுத்து வழங்கிவிட முடியாது. தயவுசெய்து பரதநாட்டியம் போன்ற அழகான கலையை அவமதிக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஷாமா முகமது மட்டுமன்றி, அனிதா ஆர். ரத்னம் மற்றும் கிருத்திகா சிவசாமி போன்ற இந்தியாவின் முன்னணி பாரம்பரிய நடனக் கலைஞர்களும், அனன்யா பாண்டே பரதநாட்டிய கலையை மிக மோசமாக ஆடி அவமதித்துவிட்டதாக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். சிலர் ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

"இயக்குனரும், நடன இயக்குனரும் எப்படிச சொல்லிக்கொடுத்தார்களோ, அப்படித்தான் ஒரு நடிகை ஆட முடியும். இதற்கு அனன்யாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்?" என்றும், "ஒரு படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்தால், அதற்காக 7 வருட மருத்துவம் படித்துவிட்டா நடிக்க முடியும்?" என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தத் தியேட்டர் நடனத்திற்கு உதவியாக இருந்த உதவி நடன இயக்குநர் அனன்யா ஆர். குரூப், அனன்யா பாண்டேவிற்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "அனன்யா பாண்டேவிற்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தது ஒரு சிறந்த அனுபவம். அவர் ‘சந்த் மேரா தில்’ படத்தில் தனது நடனத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்" என்று பாராட்டியுள்ளார்.

தர்மா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், விவேக் சோனி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சந்த் மேரா தில்’ திரைப்படத்தில் அனன்யா பாண்டே மற்றும் ‘கில்’ பட புகழ் லக்ஷ்யா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படம் தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்த நடன சர்ச்சை குறித்து நடிகை அனன்யா பாண்டே இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com