என் மலர்
சினிமா செய்திகள்

திரைப்படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு
- நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் புகார் தெரிவித்தார்.
- நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை வின்சி அலோசியஸ், படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், அது போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நடிகர் பற்றி விவரங்களை நடிகை வின்சி அலோசியஸ், நடிகர்கள் சங்கத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் போதை பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரை தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு வழங்கியதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
படப்பிடிப்பில் நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். நடிகரின் பெயரை வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பாக விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் கூறினார். இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு விவாதித்தது.
போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்க முடியாது. போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஷைன் டாம் சாக்கோவை திரைப் படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம். தற்போது நாங்கள் உள் புகார்கள் குழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.






