சர்தார் 2 & மார்ஷல்-ஷூட்டிங் ஓவர்: நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த மூவ்கள்!

வரும் ஆண்டுகளில் கார்த்தியின் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் எனத் திரை உலகினர் கணித்துள்ளனர்.
Actor Karthi's Next Moves
Published on

தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான பாதையை உருவாக்கி மாஸ் மற்றும் கிளாஸ் என இரண்டு பாணிகளிலும் முத்திரை பதித்து வரும் நடிகர் கார்த்தி-யின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான லைன்-அப் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த சில காலங்களாகவே மிகவும் கவனமாக கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில்,

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுடன் ரிலீசுக்குத் தயாராக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கார்த்தியின் மற்றொரு பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'மார்ஷல்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக முடிவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அவரது 30-மாவது திரைப்படமான 'கார்த்தி 30' படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக உருவாகும் இந்தத் திரைப்படம் கார்த்தியின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 'டாடா' பட புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் தற்போது இறுதி வடிவத்தைப் பெற்று வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமன்றி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கார்த்தியின் மெகா ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'கைதி 2', பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இரண்டாம் பாகமான 'தீரன் 2' மற்றும் அவரது புதிய படங்களான 'ஹிட் 4', 'மார்ஷல் 2' ஆகிய திரைப்படங்களும் கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்களாகப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இந்த அதிரடிப் படப் பட்டியலைத் தவிர, இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களான சுந்தர் சி, பாண்டிராஜ், மாரி செல்வராஜ், போயபட்டி ஸ்ரீனு, விவேக் ஆத்ரேயா மற்றும் பிரசாந்த் வர்மா ஆகியோருடனும் கார்த்தி அடுத்தடுத்த படங்களுக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால், வரும் ஆண்டுகளில் கார்த்தியின் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் எனத் திரை உலகினர் கணித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com