

‘வீரம்’ படத்தில் அஜித் தம்பியாக நடித்தவர் பாலா. பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரான பாலா கடந்த 2019-ம் ஆண்டு பாடகி அமிர்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பாலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கையில் இருந்து இப்போது என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. திருமணம் ஆனதில் இருந்து பல விஷயங்கள் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன். எல்லா பிரச்சனைகளையும் நான் உள்ளேயே வைத்துக் கொண்டிருந்தேன்.
கடந்த சில ஆண்டுகளாக என்னை சுற்றி வந்த வழக்கு, பிரச்சனைகள், சர்ச்சைகள் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இந்த உலகத்தில் சட்டம் ஒன்று இருக்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது.
இனி யாராவது என்னைப் பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். எல்லா உண்மைகளையும் வெளியில் சொல்வேன். உண்மை வெளிவரக்கூடாது என்றால் விஷம் வைத்து என்னையும், என் மனைவியையும் கொன்று விடுங்கள்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.