

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பதிவாகிய வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 19 லட்சத்து 51 ஆயிரத்து 6 மோட்டார் சைக்கிள்கள், 1 லட்சத்து 9 ஆயிரத்து 777 ஆட்டோக்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 144 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 82 ஆயிரத்து 80 டிராக்டர்கள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 536 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 26 லட்சத்து 92 ஆயிரத்து 449 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இது கடந்த பிப்ரவரி மாதம் 24 லட்சத்து 9 ஆயிரத்து 362 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 11.75 சதவீதம் வாகனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த 2024-25 நிதியாண்டில் 2 கோடியே 61 லட்சத்து 87 ஆயிரத்து 255 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது 2025-26-ம் நிதியாண்டில் 2 கோடியே 96 லட்சத்து 71 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 13.30 சதவீதம் அதிகம் ஆகும். 2024-25-ல் மின்சார சரக்கு ஆட்டோக்கள் 64 ஆயிரத்து 970 ஆக பதிவாகியிருந்தது, கடந்த ஆண்டு 86 ஆயிரத்து 384 ஆகவும், தனிநபர் பயன்பாட்டுக்கான ஆட்டோக்கள் பதிவு 982-ல் இருந்து 1,583 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், கடந்த நிதி ஆண்டில் வாகனங்களின் பதிவு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. உந்து சக்தியாக அமைந்தது என்றார்.