கன்னி: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

பொதுவாக கோச்சாரத்தில் லாப ஸ்தானத்திற்கு கிரகங்கள் வருவது மிகச் சிறப்பாகும்.
கன்னி
கன்னி
Published on

கன்னி ராசியினருக்கு 4, 7ம் அதிபதியான குரு பகவான் தற்போது கோச்சாரத்தில் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் 2.6.2026 அன்று உச்சம் அடைகிறார். இது விரும்பிய மாற்றங்களை வழங்கக்கூடிய குரு பெயர்ச்சியாகும். அதிக திறமையுடன் பிறரை வழி நடத்துவதில் வல்லவராகவும் மாறுவீர்கள்.

லாபகுருவின் ஐந்தாம் பார்வை மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும், ஏழாம் பார்வை ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் ஒன்பதாம் பார்வை ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திலும் பதிகிறது.இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார்.இதனால் கன்னி ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.

லாப குருவின் பொதுவான பலன்கள்

பொதுவாக கோச்சாரத்தில் லாப ஸ்தானத்திற்கு கிரகங்கள் வருவது மிகச் சிறப்பாகும். அந்த வகையில் தற்போது குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிக உன்னதமான அமைப்பாகும்.தொழில் வியாபாரம் உத்தியோகக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தை பெற முடியும். புதிய தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலிதமாகும். உறவுகள் தர முடியாத பணத்தையும் தைரியத்தையும் கற்ற கல்வி வழங்கும்.

தற்போது குருபகவான் சாதகமாக இருப்பதால் கற்ற கல்வி பணத்தை பொழியும்.கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் குறையத் துவங்கும்.தெளிவான பேச்சு, தைரியமான செயல்பாடுகள், பண்பான நடவடிக்கைகள் இவை அனைத்தும் சமுதாயத்திற்கு உங்களை அடையாளம் காட்டும். தன வரவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். எதிர்கால தேவைக்காக சேமிப்பீர்கள்.பாலிசி முதிர்வு தொகை,நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள், பிஎப் பணம் வரும்.

பங்குச் சந்தை மற்றும் பூர்வீக சொத்து விற்பனையில் அதிக ஆதாயம் உண்டாகும். மனக்கவலைகள் அகலும். மன அழுத்தம் குறையும். தடை தாமதங்கள் விலகி நல்லதொரு முன்னேற்ற பாதைய நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

ஐந்தாம் பார்வை பலன்கள்

லாபகுருவின் ஐந்தாம் பார்வை மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது.தொட்டது துலங்கும் காலம். எடுத்த காரியத்தில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். ஞாபக சக்தி கூடி செயல்திறன் அதிகரிக்கும். உடன் பிறந்த சகோதரர்களுக்கு உங்கள் மேல் மதிப்பு, மரியாதை உயரும்.சொத்து பிரிவினை பாகப்பிரிவினையில் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் வேலை மாற்றம் நடக்கலாம்.

வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சி வெற்றியாகும். உடலும் உள்ளமும் குளிரும் படியான நல்ல சம்பவங்கள் நடக்கும்.குடும்ப விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறப் போகிறீர்கள்.

பணத்திற்காக உங்களை உதாசீனம் செய்த உறவுகள் தவறை உணர்ந்து மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வெளியே சொல்லமுடியாமல் தவித்த கடன் பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். ஜாமீன் வழக்கு சாதகமாகும். திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கிய குறைபாடு சீராகும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.தகவல் தொடர்பு சாதனங்களை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.

ஏழாம் பார்வை பலன்கள்

லாபகுருவின் ஏழாம் பார்வை ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது.பொன்னும், பொருளும் சேரும். சுப பலன்கள் அதிகமாகும்.கொடுத்த வாக்கை, நாணயத்தை காப்பாற்றுவீர்கள். உத்தியோகம், தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். வராக்கடன் வசூலாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். அடமான நகைகள் நில புலன்களை மீட்கக்கூடிய வகையில் வாழ்வாதாரம் உயரும். அதற்குத் தேவையான கடன் தொகை கிடைக்கும் சித்தப்பா மற்றும் உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குல குடும்ப இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.

புதுப்புது மாற்றங்கள் நிகழும். திருமணம் வளைகாப்பு கிரகப்பிரவேசம் என அடுக்கடுக்கான நல்ல விஷயங்கள் நடக்கும்.காதலுக்கு ஏற்பட்ட தடைகள் அகலும்.அதிர்ஷ்டம் சார்ந்த செயல்கள் பல மடங்கு லாபத்தை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும்.குடும்ப பொருளாதார பிரச்சினையை சமாளிக்க வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைத்து முன்னேறுவீர்கள்.தாய் தந்தை வழி உறவுகளால் சில ஆதாயங்கள் செல்வங்கள் கிடைக்கும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில்பதிகிறது.நன்மையும் மேன்மையும் உண்டாகும்.விருப்பங்கள் நிறைவேறும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.லௌகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களின் மீதும் நாட்டம் மிகுதியாகும்.நல்லவிதமான மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும்.உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும் சிந்தனையும் செயல்திறனும் கூடும்.சமுதாய அந்தஸ்து கூடும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

நினைத்தது நினைத்தபடியே நடக்கும்.புதிய முயற்சிகளால் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். திருமணத்திற்கு விரும்பிய வரன் அமையும்.திருமண தடைகள் அகலும். கூட்டுத் தொழில் நடத்துபவர்களுக்கு இது மிகவும் உகந்த காலமாகும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் பகைமை மறைந்து சேர்ந்து வாழ்வார்கள்.

எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். புதிய முயற்சிக்கு நண்பர்களும் வாழ்க்கைத் துணையும் பக்கபலமாக இருப்பார்கள்.தான தர்மங்கள் உதவிகள் செய்து மகிழ்வீர்கள்.

புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்

(2.6.2026 முதல் 18.6.2026 வரை)

கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதியான குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிக்கும் காலம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிலும் முதன்மையாக இருக்க விரும்புவீர்கள் சமுதாயத்தில் நல்ல பெயர் அதிகரிக்கும். பதவி ஆசைகள் தலை தூக்கும்.சில காரியங்களில் தடை ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.

நல்ல சொத்துக்கள் மற்றும் சீருடன் வரன் அமையும். சிலர் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.நண்பர்களுடன் இணைந்து கூட்டாக சொத்துக்கள் வாங்கலாம்.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.6.2026 முதல் 19.8.2026) வரை

கன்னி ராசிக்கு 5,6ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலர் தொழிலை மாற்றுவார்கள் அல்லது தொழில் முறையை மாற்றுவார்கள்.பூர்வீகச் சொத்தை விற்று கடன் அடைப்பார்கள். அல்லது பிள்ளைகளின் எதிர்கால தேவைக்காக கடன் பெறுவார்கள் சிலரின் சொத்துக்கள் உடன் பிறப்புகளால் பயன்படுத்தப்படும்.சிலருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)

கன்னி ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில்குரு பகவான் சஞ்சரிக்கும் காலம்தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். கற்பனைகள் கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும். அரசு காரியங்களில் வெற்றி உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு விரயத்தை சுபமாக மாற்றுவீர்கள்.

26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் தொழிலில் ஏற்படும் போட்டி பொறாமைகளை சமாளிக்க பழக வேண்டும்.இந்த காலகட்டத்தில் குருவும் கேதுவும் இணைந்து பயணிப்பதால் ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும்.தர்மத்தின் வழி சென்றால் கர்மத்தின் வலி குறையும்.

மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(1.11.2026 முதல் 13.12.2026 வரை)

அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் விரயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.சிக்கனத்தை கடைப்பிடித்தால் சேமிப்பு ஏறும் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும்.மாமனார் மாமியாரின் ஆதரவு மகிழ்ச்சியை கூட்டும்.புதிய வேலை தேடும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இறை நம்பிக்கை கூடும்.பூர்வீகச் சொத்து பிரச்சனையை பொறுமையாக கையளவும்.வேற்று மதத்தினரின் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்கள் புதிய வேலைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிய பிறகு பழைய வேலையை விட வேண்டும்.

பரிகாரம்

கன்னி ராசியினர் ஆன்மீக குருமார்களின் நல்லாசிகளை பெறுவதால் லாப குருவால் மேன்மையான நன்மைகள் உண்டாகும்.அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு உடை தானம் வழங்க வேண்டும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com