

மீன ராசியினரே இதுவரை அர்த்தாஷ்டம குருவாக ராசிக்கு நான்கில் நின்று பலம் கொடுத்த குரு பகவான் 2.6.2026 முதல் ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக நின்று பலன் தருவார். மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வது அபரிமிதமான சுப பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும்.
தொழில் உத்தியோகத்தின் மூலமாக சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்திலும் ஏழாம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திலும் ஒன்பதாம் பார்வை ராசியில் உள்ள சனி பகவான் மேலும் பதிகிறது.
இது ஜென்ம சனியின் காலமாகும். குருவின் பார்வை பலத்தால் ஜென்ம சனியின் தாக்கம் குறையும். இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார். இதனால் மீன ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
பஞ்சம குருவின் பொதுவான பலன்கள்
பொதுவாக ஐந்தாம் இடத்தில் உச்ச கிரகம் இருக்கும் போது ஜாதகருக்கு சமுதாய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அதுவும் ராசி அதிபதி தொழில் ஸ்தான அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது முதல் தரமான யோகமான அமைப்பாகும். இது போன்ற யோகமான காலம் மீண்டும் உருவாக 12 ஆண்டுகளாகும். மனதில் நல்ல சிந்தனைகள் தோன்றும் தீராத தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொதுநல சிந்தனைகள் அதிகரிக்கும்.
தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். ஆன்ம பலம் கூடும். பல வருடங்களாக பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும். இதுவரை நிலவி வந்த தடை தாமதங்கள் நீங்க நல்லதொரு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அவரவர் வயதிற்கு ஏற்ற சுப பலன்கள் நடக்கும் பதவிகள் பட்டங்கள் பரிசுகள் குவியும்.
திருமணம் வீடு வாகன யோகம் குழந்தை பிறப்பு நிம்மதியான தொழில் உத்தியோகம் என இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் அனுபவித்து விடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனசஞ்சலம் அகலும்.
ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. பலகாலமாக தீர்க்க முடியாமல் முடியாமல் கிடந்த குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல விடை கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மத்தியில் உங்களின் பெயர் புகழ் பரவும்.
தவறான புரிதலால் பிரிந்த உறவுகள் சூழ்நிலையை புரிந்து கொள்வார்கள். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் மறைத்து நல்ல சிந்தனை உண்டாகும். கோவில் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆலயத் திருப்பணிக்கு உதவி செய்வீர்கள். பல கோயில் குளம் ஏறி இறங்கிய பலனால் புத்திர பேறு கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கும் பாக்கியம் உண்டாகும். உபரி வருமானத்தை சேமித்து பொன் பொருள் வாங்குவீர்கள்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. இதுவரை ஒரு தொழில் செய்தவர்கள் உப தொழில் செய்து வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும். நிலையான தொழிலோ, உத்தியோகமோ இன்றி அவதியுற்றவர்களுக்கு மனதிற்கு பிடித்த தொழில் அல்லது உத்தியோகம் அமையும்.
தடைபட்ட பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை பேச்சு வார்த்தையில் சுமூகமாகி உங்களை நாடி வரும். எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். பணிச் சுமை குறையும். பொருளதார முன்னேற்றம் ஏற்படும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பொன், பொருள் வாங்குவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும்.
ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை ராசியில் உள்ள சனிபகவான் மேல் பதிகிறது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும்.உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் சொல் கேட்பார்கள். சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சொகுசு வாழ்க்கையை நோக்கி முன்னேறுவார்கள். மனதில் தெளிவு, தன்னம்பிக்கை பிறக்கும்.
உடல் தேஜஸ் பெறும். பல புதிய மாற்றங்கள் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். மனதில் இருந்த கவலைகள், கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலம். பட்ட கஷ்டத்திற்கு பயனடையும் காலம் என்று சொல்லலாம்.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம்கவுரவம் அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை நிலவி வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் பாடத்தை எளிதி முடிப்பீர்கள். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். மதப்பற்று மிகும். பல தலைமுறையாக விற்காத பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சொகுசு பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை
மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அரசியலில் உங்கள் பெயர், புகழை உயர்த்தக்கூடிய காலமாக இருக்கும். எதிர்கால வெற்றியில் நிலவிய தடைகள் தகரும். விரும்பிச் சென்ற போது கிடைக்காத பதவி இப்பொழுது உங்களைத் விரும்பி வரும். சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். சமுதாய ஆதரவு மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிலருக்கு கவுரவ பதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
மீன ராசிக்கு 4,7ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம். இது சூப்பரான குருப்பெயர்ச்சி. நேரம் காலம் நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தவேண்டும். உபரி வருமானத்தை சேமித்து நகை,வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழி சொத்து கிடைக்கலாம். உடல் பெருக்கம் ஏற்படும். உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பணிபுரியும் பெண்களின் தகுதிக்கு தகுந்த உயர்வு உண்டு. சென்ற ஆண்டு பெற்ற கடன்களை அடைக்கத் தேவையான உபரி வருமானம் கிடைக்கும். விவசாயிகளுக்கு இது பொற்காலமாக அமையும்.
26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து மாணவ, மாணவிகள் மனனம் செய்யாமல் நன்றாக புரிந்து படித்தால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள்.
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை)
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் உறவினர்களாலும், சமூதாய அந்த ஸ்தான மனிதர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும். நல்லது நினைக்க நல்லதே நடக்கும்.
14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் விலகும்.சிலருக்கு அத்தை, மாமா அல்லது சித்தி, சித்தப்பா மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.
பரிகாரம்
வியாழக்கிழமை சித்தர்களின் ஜீவ சமாதியில் 3 நெய்தீபம் ஏற்றி வழிபட சுப பலன்கள் உண்டாகும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் மஞ்சள், சந்தனம் அபிசேகம் செய்து மஞ்சள் லட்டு படைத்து குரு பகவானை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406