குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published on

உழைப்பை நம்பி வாழும் மீன ராசியினரே இதுவரை ஜென்ம குருவாக இருந்த உங்கள் ராசி அதிபதி குரு தன ஸ்தானம் நோக்கிச் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

தன குருவின் பொதுபலன்கள்:

மீன ராசிக்கு குருபகவான் 1,10ம் அதிபதி. ராசி அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி குரு தன ஸ்தானம் செல்வது மிகச் சிறப்பான கிரக அமைப்பு. 2ம்மிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.தனகாரகன், வாக்கு ஸ்தான அதிபதி குருவே வாக்கு ஸ்தானம் செல்வது யோகமான காலம்.பொன்னவன் குரு 2ல் வந்ததால் பொசுங்கி விடும் துன்பம். பொன்னும், பொருளும் சேரும். ஜென்ம குருவின் காலத்தில் நடைபெற்ற சுப பலன்களை விட பல மடங்கு மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறப் போகிறீர்கள்.

நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். தொட்டது எல்லாம் பணமாக காய்க்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பணத்திற்காக உங்களை உதாசீனம் செய்த உறவுகள் தவறை உணர்ந்து மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வாக்குப் பலிதம் உண்டாகும். கொடுத்த வாக்கை, நாணயத்தை காப்பாற்றுவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். குறிப்பாக பேசுவதை தொழிலாக கொண்டவர்கள், உணவுத் தொழில், வக்கீல்கள், ஜோதிடர்கள், மார்கெட்டிங், அரசாங்க ஒப்பந்ததாரர்கள் போன்றோரின் தொழில்களின் வளர்ச்சியை அளவிட முடியாது. வராக்கடன் வசூலாகும்.வெளியே சொல்லமுடியாமல் தவித்த கடன் பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். ஜாமீன் வழக்கு சாதகமாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். கண் கோளாறுகள் சீராகும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு ஆறாமிடமான ருணம், ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவின் ஆறாம் பார்வை பதிகிறது. எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள், குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணம், அதிர்ஷ்ட குறைவு, தடை, தாமதம் போன்ற அனைத்தும் விலகி மேன்மையான பலன் உண்டாகும் அற்புத காலமாகும். நோய் குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பூரண நலம் பெறுவார்கள். நல்ல ஆரோக்கியம் பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சரளமான பணப்புழக்கம் இருப்பதால் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுப்பீர்கள்.அச்சுறுத்திய எதிரிகள் விலகிச் செல்வார்கள். விண்ணப்பித்த தொழில் விரிவாக்கம், வீடு வாகனக் கடன் கிடைக்கும். சொத்துக்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். வேலைக்காக குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் சேருவீர்கள்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு எட்டாமிடத்தில் குருவின் ஏழாம் பார்வை பதிகிறது. எட்டாமிடம் என்பது துன்பம், வேதனை, அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி, ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். ஆயுள், ஆரோக்கியம், தீராத நோய் தொடர்பான பய உணர்வு நீங்கும். வேதனைப் படுத்திய வம்பு, வழக்கு, அவமானம் இவற்றிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யார் வம்புக்கு இழுத்தாலும் கண்டும் காணமலும் இருப்பது நல்லது. நல்ல நேரம் வரும் பொழுது எதிரிகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாப்பது மிக அவசியம். வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக உயில் சொத்து புதையல், லாட்டரி, ரேஸ், அதிர்ஷ்ட பணம் போன்றவை கிடைக்கலாம்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குருவின் பத்தாம் பார்வை பதிகிறது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தடைகள் விலகுவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலால் கவுரவம், அந்தஸ்து . கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். அதிருப்தி மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் கூட்டாளிகளும் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். புத்திர பிராப்தம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களை பாதித்த செய்வினை மற்றும் திருஷ்டி தோஷம் விலகும்.

வெற்றுப்பத்திரம், எழுதாத காசோலை போன்றவற்றில் கையெழுத்துப் போடுதல், ஜாமீன் போன்றவற்றைப் தவிர்க்க வேண்டும்.வெளிநாட்டில், வெளிநாட்டு கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு மேன்மை உண்டு.வெளிநாடு செல்ல விசா போன்ற ஆவணங்களில் இருந்த வில்லங்கம் விலகும். முன் அனுபவம், பரிட்சயம் இல்லாத தொழிலை தவிர்க்க வேண்டும்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

மீன ராசிக்கு 3,8ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இடப்பெயர்ச்சி உண்டாகும். ஞாபக மறதிஅதிகரிக்கும். ஆபரணங்களை கழட்டி அங்கே வைத்தேன், இங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். முக்கியமான ஆவணங்கள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் அல்லது வைத்த இடம் மறந்து போகும் அல்லது ஆவணங்களில் திருத்தம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களுடன் தேவையில்லாத வம்பு, வழக்கு, சொத்து தொடர்பான பாகப்பிரிவினை பிரச்சனை உருவாகும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

மீன ராசிக்கு ஆறாம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பங்காளிச் சண்டை, வாய்க்கால் வரப்புச் சண்டை எல்லைத் தகராறுகள் சுமூகமாகும். உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான நட்பை உருவாக்கி கொடுக்கும். பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். கடன் தொல்லையிலிருந்து நிரந்தரமான தீர்வு கிடைக்கும். அசதி, மந்தம், சோர்வு உண்டாகும். வேலைப் பளு அதிகரிக்கும்.

குருவின் வக்ர பலன்கள்:

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் பெரிய பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. வரவை விட செலவு அதிகரிக்கலாம். நண்பர்கள் எதிரிகளாவார்கள். வேலைமாறும் அல்லது வேலை பறிபோகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பேச்சால் பிரச்சனை வளரும். சொத்துக்கள், நகைகள் அடமானத்திற்கு செல்லும்.

பெண்கள்: சுய தொழில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களின் திறமைக்கு தனி மதிப்பு கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பெரியவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகமான நகை, ஆடம்பர பொருட்கள் சேர்ப்பீர்கள் பிள்ளைககள் விசயத்தில் இருந்த கவலைகள் அகலும்.

மாணவர்கள்: உயர்கல்வி கற்பதில் நிலவிய தடைகள் விலகும். விரும்பிய பள்ளி, கல்லூரியில் படிப்பை தொடர்வீர்கள். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, போட்டித் தேர்வு களில் உங்கள் தனித்திறமை மிளிரும். அரியர்ஸ் வைத்த பாடங்களை மீண்டும் எழுதி பாஸ் பண்ண முடியும்.

உத்தியோகஸ்தர்கள்: வேலை தேடுபவர்களுக்கு படிப்பிற்கும் திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். இதுவரை இல்லாத தெம்பு மனதில் குடிபுகும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கவுரவம், அந்தஸ்து கூடும்படியான நல்ல சம்பவங்கள் நடக்கும். அரசு தனியார் துறையினருக்கு துறை ரீதியான இடமாற்றம் அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றம் கிடைக்கும்.

ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30, 2023ல் ராகு ஜென்ம ராசியில் அமர்கிறார். கேது ஏழாமிடம் செல்கிறார். உறுதியான கோட்பாடு உடையவர்களாக மாறுவீர்கள். யாருக்காவும் மனதை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில் மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பரிகாரம்: ஏழரைச் சனியின் காலம் என்பதாலும் இந்த ஓராண்டும் குருபகவான் லாபாதிபதி, விரயாதிபதியாகிய சனியின் பார்வையில் உலாவுவதால் யாரையும் எதையும் நம்பக்கூடாது. தன் கையே தனக்கு உதவி என பொறுப்போடும், விழிப்போடும் இருப்பது நல்லது. பெளர்ணமி நாட்களில் அவல் பாயாசம் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஜென்ம நட்சத்திர நாட்களில் மாற்றுத்திரனாளின் தேவையறிந்து உதவிட ஏழரைச் சனியின் பாதிப்பு குறையும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com