மகரம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

வெளியில் சொல்ல முடியாமல் தவித்த அனைத்து பிரச்சனைகளில் இருந்து மீளக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
மகரம்
மகரம்
Published on

மகர ராசியினரே இதுவரை ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து குரு பகவான் 2.6.2026 முதல் சம சப்தம ஸ்தானம் செல்கிறார். மகர ராசிக்கு குருபகவான் 3,12ம் இடங்களுக்கு அதிபதியானவர். தற்போது சம சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெற்று தனது ஐந்தாம் பார்வையால் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தையும் சம சப்தம பார்வையால் ராசியையும் ஒன்பதாம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தையும் பார்ப்பார்.

இது மகர ராசியினருக்கு இழந்த இன்பங்களை மீட்டெடுக்கும் காலமாகும். கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியை அதிகரித்துக் கொள்வதுதான் திறமையாகும்.

இப்போது திறமையால் உங்களை முன்னேற்றப் பாதையில் குரு பகவான் அழைத்துச் செல்லப் போகிறார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார். இதனால் மகர ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.

சம சப்தம குருவின் பொதுவான பலன்கள்

பொதுவாக ராசியை குரு பார்க்கும் காலங்களில் உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் அகலும். குருவின் நேரடி பார்வையால் கோடி புண்ணியங்கள் கிடைக்கும் உங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள் எண்ணங்கள் கனவுகளை நிறைவேற்ற இதுவே சாதகமான காலமாகும். புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு எழும்பும். வெறுமை உணர்வு தனிமை அகலும்.

வாழ்க்கை வளம் பெற உதவக்கூடிய நல்ல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். அவரவர் வயதிற்கு ஏற்றபடி நடக்க வேண்டிய நல்ல விதமான அனைத்து சம்பவங்களும் நடக்கும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த அனைத்து பிரச்சனைகளில் இருந்து மீளக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு.

தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். செய்வினை, கண் திருஷ்டி தோஷங்கள் அகலும்.சுய தொழில் புரியும் பெண்களுக்கு பிரமாண்ட தொழில் வளர்ச்சி உண்டு. உங்கள் முயற்சிக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டினரின் ஒத்துழைப்பு இருக்கும்.விதியை மதியால் வெல்லக்கூடிய மனவலிமையை குருபகவான் உங்களுக்கு வழங்கப் போகிறார்.

ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் பதிவதால் மனதில் இருந்த அனைத்து விதமான ஆசைகளும் பூர்த்தியாகும். வருங்காலம் பற்றிய நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். ஏற்றுமதி செய்யும் வகையில் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். அரசாங்க உதவியும் மானியமும், உயரிய விருதும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

புதிய தொழில் முயற்சிகளை செயல்படுத்த திட்டம் வகுக்கலாம். சிலர் புதிய தொழில் கிளைகள் துவங்கலாம். வியாபாரத்தில் லாபகரமான முன்னேற்றம் தென்படும். இதுவரை வருமான வரி கட்டாதவர்களுக்கு வருமான வரி கட்டக் கூடிய வகையில் வருமானம் உயரும். சிலருக்கு தொழில் விரிவாக்கம் அல்லது சுப செலவிற்காக கடன் ஏற்பட்டாலும் வட்டியும், முதலுமாக திருப்பி செலுத்த முடியும்.

வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட கெளரவக் குறைவு பிரச்சனைகள் அகலும். சிலர் கட்சி விட்டு கட்சி மாறி எதிர்காலத்தை அதிர்ஷ்டமாக்கி கொள்வார்கள். பட்டம், பதவியைத் தேடி அலைய வேண்டியதில்லை, அது நேரம் வரும் போது கூடி வரும் என்பதை உணர்வீர்கள்.

ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் 7ஆம் பார்வை ராசியில் பறிகிறது. இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தோற்றம் பொலிவு பெறும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சுய ஜாதகத்தில் எவ்வளவு தடை இருந்தாலும் அகன்று திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். அதிக முதலீடு வழங்கக்கூடிய புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

பழைய கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பகைமை அகலும். மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக ஏற்பட்ட மனக்கசப்புகள் சீராகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்களால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சனையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட்டால் எண்ணிய செயல்கள் யாவும் அனுகூலமாகும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை சகாய ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனியின் மேல் பதிகிறது. தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் உழைப்பிற்கு முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த புதிய வேலை முயற்சி வெற்றி தரும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். எதிலும் வெற்றி உண்டாகும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்ச்சி நடக்கும். திரைத் துறையினருக்கு முக்கிய கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்கும். கண் காது மூக்கு தொண்டை தொடர்பான உடல் உபாதைகளுக்கு உரிய வைத்தியம் கிடைக்கும்.

புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்

(2.6.2026 முதல் 18.6.2026 வரை)

மகர ராசிக்கு 3, 12 ஆம் அதிபதியான குருவின் புனர்பூச நட்சத்திர சாரத்தில்குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும்.அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டாரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது.

எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது.தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக்கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.6.2026 முதல் 19.8.2026) வரை

மகர ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தன ஸ்தான அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் யோசனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். மருத்துவமனைச் செலவுகள் முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை) மகர ராசிக்கு 6,9ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஆ்மார்த்தமான முன்னோர்கள் வழிபாடு உங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எட்டாமிட கேது விபரீத ராஜ யோகத்தை வழங்குவார். இரண்டாமிட ராகு மனைவி மக்களுக்காக குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வைப்பார். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வரவும் செலவும் சரியாக சரியாக இருக்கும்.

26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். கடன் தொல்லை ஒரு பக்கம் இருத்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு.

மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(1.11.2026 முதல் 13.12.2026 வரை)

அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் அஷ்டம ஸ்தானத்தில் இணைவதால் சொல்லாலும் செயலாலும் ஒன்று பட முடியாது. புகழுக்கு கலங்கம் மதிப்பு மரியாதை குறைவு ஏற்படலாம். தேவையற்ற வம்பு வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. 14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும். தினமும் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். கட்டுப்படுத்த முடியாத சில விரயங்கள் வரலாம்.நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

பரிகாரம்

லட்சுமி நரசிம்மர் வழிபாடு அனைத்து விதமான இன்னல்களில் இருந்தும் உங்களை காக்கும். மகர ராசியினர் காவல் தெய்வங்களை வழிபடுவதால் நல்ல மாற்றங்களை சந்திக்க முடியும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com