மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

ஒரு ஜாதகத்தில் சுகஸ்தானம் என்பது சொத்து சுகம் ஆரோக்கியம் கல்வி தாயின் நிலை போன்றவற்றை பற்றி கூறக்கூடிய இடமாகும்.
மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
Published on

மேஷ ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் உச்சம் பெற போகிறார். ராசிக்கு 9, 12ம் அதிபதியான குரு பகவான்சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுபெரிய வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய அமைப்பாகும்.

நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் எட்டாமிடமான சம சப்தம ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் 12ம் மிடமான அயன சயன போக ஸ்தானத்தையும் பார்ப்பார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார்.இதனால் மேஷ ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.

சுகஸ்தான குருவின் பொதுவான பலன்கள்

ஒரு ஜாதகத்தில் சுகஸ்தானம் என்பது சொத்து சுகம் ஆரோக்கியம் கல்வி தாயின் நிலை போன்றவற்றை பற்றி கூறக்கூடிய இடமாகும். இந்த இடத்தில் குரு பகவான் உச்சம் அடையக்கூடிய காலம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையை உருவாகும் அமைப்பாகும். நீர்வீடான கடக ராசியில் குரு பகவான் தன்னை புனிதப்படுத்திக் கொள்ளும்ஸ்தானமாகும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் குடிபுகும்.

நம்மால் சாதிக்க முடியும் என்ற மனநிலை உருவாகும்.யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிர்காலத்தை மட்டுமே மனதில் கொண்டு பயணிப்பீர்கள். உங்களின் வாழ்நாள் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்ற குருபகவான் ஆசி புரிவார். தற்போது குரு பகவான் உங்களை புனிதப்படுத்த போகிறார். நான்காம் இடம் என்பது சொத்து சுகங்களை மட்டும் தரக்கூடிய இடம் அல்ல ஆரோக்கியத்தை தேக ஆரோக்கியத்தை பற்றி கூறக்கூடிய இடமாகும். தனது புனித தன்மையால் இதுவரை உங்களுக்கு இருந்த நோய் தாக்கம் குறைய துவங்கும்.

ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் பதிகிறது. எட்டாமிடம் என்பது பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகும்.எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கக்கூடிய முதலீட்டைக் குறிக்கக்கூடிய இடமாகும். அந்த இடத்தை தற்போது குருபகவான் பார்க்கும் போது எதிர்காலத்திற்காக சேமிக்க கூடிய வகையில் உங்களின் வாழ்வாதாரம் உயரும். பலருக்கு வாழும் காலத்தில் வாழ ஒரு வீடு வேண்டும் என்பது பலரின் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும்.

தற்போது உங்களுக்கு குரு பகவானின் பார்வை எட்டாம் இடத்திற்கு இருப்பதால் புதிய அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.இது மேஷ ராசிக்கு சொத்து சுகங்களை அமைத்து தரக்கூடிய காலமாகும். இதற்கு முன் வாங்கிய பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும்.புதிய சொத்துக்கள் சேரும்.

ஏழாம் பார்வை பலன்கள்

சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் ஏழாம் பார்வை பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. கர்ம வினைப்படி இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய வினைகளை கூறக்கூடிய 10ம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் இதுவரை அனுபவித்த தீய வினைகள் குறைந்து நல்ல வினைகள் உங்களை வந்து சேரும்.

பிறவி கர்மா படி இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் அனுபவிக்க கூடிய காலகட்டமாகும்.கர்ம பலன்கள் தீரும்.இதுவரை தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு நல்ல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழிலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

படித்து முடித்தவர்களுக்கு நல்ல தொழில் அல்லது உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். நிலையான நிரந்தரமான வாழ்வியல் முன்னேற்றம் உருவாகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு உருவாகக்கூடிய காலமாகும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்

குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையால் பன்னிரெண்டாம் இடமான அயன சயன விரய ஸ்தானத்தை பார்க்கிறார். பல வருடங்களாக மன நிம்மதி இன்றி தூங்காமல் இருந்தவர்கள் துக்கத்தை மறந்து நிம்மதியாக தூங்குவார்கள்.வெளிநாட்டு வேலை வாய்ப்புகள். கிடைக்கும். வெளிநாட்டில் பல வருடங்கள் ஆக குறைந்த ஊதியத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கக்கூடிய வகையில் நல்ல உத்தியோக அமைப்புகள் வந்து சேரும்.

வெளிநாட்டு குடியுரிமையை எதிர்பார்த்தவர்களுக்கு அயல்நாட்டு குடியுரிமை கிடைக்கும்.பாஸ்போர்ட் விசா சார்ந்த பிரச்சனைகள் அகலும்.அதிகமான சுப விரயங்கள் உண்டாகும்.இதுவரை குடும்பத்தில் தடைபட்ட திருமணம் வீடு கட்டுதல் போன்ற சுப விசேஷங்கள் நடக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.

புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்

(2.6.2026 முதல் 18.6.2026 வரை)

குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிக்கும் அந்த 16 நாட்களில் தடைபட்ட அனைத்து சுப பலன்களையும் நடத்தித் தருவார். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மகிழ்வீர்கள். பருவ வயது அடைந்து பூப்பெய்தாத பிள்ளைகள் இப்போது பூப்படைவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குலதெய்வமே குழந்தையாக வந்து பிறக்கக்கூடிய வரம் கிடைக்கும்.

பேரன் பேத்தியை பார்க்கும் பாக்கியத்தை வழங்குவார். ஆன்மீகச் சுற்றுலாக்கள் சென்றுவரும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வாழ்க்கையில் எந்த புனித ஸ்தலங்களை பார்க்க வேண்டும் என்று விரும்பினீர்களோ அந்த எல்லா புனித ஸ்தலங்களுக்கும் சென்று வரக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாகும்.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.6.2026 முதல் 19.8.2026) வரை

மேஷ ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலமாகும். இது மேஷ ராசிக்கு பொற்காலம் என்று சொல்லக்கூடிய வகையில் அதிகமான லாபத்தை பார்ப்பீர்கள்.புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட இது உகந்த காலமாகும். தொழில் முதலீடுகளை அதிகரிப்பீர்கள்.வரா கடன்கள் வசூல் ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள பழைய சம்பள பாக்கிகள் வந்து சேரும்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)

மேஷ ராசிக்கு 3,6 ம் அதிபதியான புதனின் ஆயுள் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும். வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர் மாற்றம் போன்ற விரும்பத் தகுந்த நல்ல மாற்றங்கள் நடைபெறும். ஜாமீன் அடமானம் சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் புதிய வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு சிலர் பார்க்கும் வேலையை தவற விடுவார்கள்.குருவும் கேதுவும் இணைந்து நான்காம் இடத்தில் பயணிக்கும் காலம் என்பதால் பொருளாதார நெருக்கடி எந்த விதத்தில் வேண்டுமென்றாலும் வரலாம்.தொழில் உத்தியோகத்தில் சிந்தித்து செயல்பட்டால் பெரிய பாதகம் ஏற்படாது.

மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(1.11.2026 முதல் 13.12.2026 வரை)

அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் யாரையும் நம்ப கூடாது. தன் கையே தனக்கு உதவி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முக்கிய பணிகளை பெரிய பணப்பரிவர்த்தனை களில் கவனத்துடன் ஈடுபட வேண்டும்.இழப்புகளையும் நம்பிக்கை துரோகத்தையும் சந்திக்கலாம்.

14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் தவறான விளை நிர்ணயம் உண்டாகலாம் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பாடங்களை தெளிவாகப் புரிந்து படிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வரளி மாலை அணிவித்து முரு கனை வழிபட திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் நடக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com