

கும்ப ராசியினரேஇதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் 2.6.2026 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கும்ப ராசிக்கு தன லாபாதிபதியான குரு பகவான் ஆறாம் இடம் செல்வது சற்று சுமாரான பலனாகும்.
தனலாப கிரகம் ஆறில் உச்சம் அடைவது பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான பலனை ஏற்படுத்தும். ராசிக்கு ஆறில் உச்சம் பெறும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் பன்னிரெண்டாம் இடமான அயன சயன விரய ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பார்.
ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்தில் கேதுவும் உள்ளார்கள் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார். இதனால் கும்ப ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
ஆறாமிட குருவின் பொதுவான பலன்கள்
பொதுவாக ஆறாம் இடத்தில் உச்ச கிரகங்கள் இருக்கும் போது எதிரியை வெல்லக்கூடிய வலிமையை உருவாக்கும். ஆறில் குரு ஊரில் பகை என்பது பழமொழி. ஆறில் குரு வரும் காலங்களில் ஊரில் கடன் வாங்கி பகையை அதிகரிப்பார்கள். அல்லது கடன் சுமை காரணமாக நோய் கூடும்.
தொழில் உத்தியோகத்தால் நிம்மதி குறையும்.லக்னாதிபதிக்கு ஆறாம் இடத்துடன் சம்பந்தம் கடன், நோய், எதிரி சார்ந்த பிரச்சினைகள்ஜாதகரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. ஆறாம் அதிபதிக்கு லக்னம் அல்லது லக்னாதிபதியின் சம்பந்தம் இருந்தால் கடன் நோய் எதிரி உத்தியோகம் ஜாதகரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தற்போது தன லாபாதிபதி ஆறாம் இடத்துடன் சம்பந்தப்படுவதால் குடும்ப உறுப்பினர்களுக்காக கடன் பட நேரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பிறரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் கவனமாகவும் இருப்பது நல்லது.
ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கும். கூட்டம் கூடும் ஆனால் வருமானம் வந்தாலும் பெரிய லாபம் நிற்காது அல்லது விரயங்கள் அதிகரிக்கும்.
பல புதிய தொழில் ஆர்வலர்கள் உருவாகுவார்கள். நன்கு பரிட்சயமான தொழிலை மட்டும் செய்யவும். புதிய தடாலடியான முடிவுகள் எடுக்க கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை இழந்தவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் சந்தர்ப்பம் உண்டாகும்.
சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு புதிய வேலையில் சேரலாம். சிலருக்கு ஓய்வு பெற்ற தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை மிகுதியாக இருக்கும். குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை 12ம்மிடமானஅயன சயன விரய ஸ்தானத்தில் பதிகிறது.திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். யாரையும் பகைக்க கூடாது ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். உற்றார், உறவினர்கள் அல்லது தொழில், உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும்.
உடன் பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினையில் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும். பத்திரப் பதிவு காலதாமதமாகலாம். இந்த பிரச்சனையில் தாயின் ஆதரவு உடன் பிறந்தவர்களுக்கு இருக்கும், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். வீடு வாகனத்திற்காக சிலர் சுப கடன் பெறலாம்.
சிலர் உடன் பிறந்தவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். தம்பதிகள் உத்தியோகத்திற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லலாம். எதிலும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம்.ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை
தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனியின் மேல் பதிகிறது. குருவின் ஒன்பதாம் பார்வை கும்ப ராசியினருக்கு சாதகமான ஆதரவான பலன்களை ஏற்படுத்தித் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பண வரவு அமோகமாக இருக்கும்.
பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். வராக்கடனை வசூலிக்கலாம். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். ராசியில் ராகு நிற்பதால் வேற்றுமத இன மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உழைக்காத வருமா னம் அதிர்ஷ்ட பணம் பொருள் கிடைக்கலாம்.சட்டத்திற்கு புறம்பான வழியில் ஈடுபடுவதை தவிர்த்தால் வரும் காலங்களில் சிரமங்கள் இருக்காது.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
கும்ப ராசிக்கு தன லாபாதிபதியான குருவின் சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். திருமணம் முயற்சி வெற்றி தரும். பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆசியால் இனிதே நடைபெறும்.
திருமணத் தடை அகலும். ராசியில் ராகு ,7ல் கேது இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளது. பிறப்பு ஜாதகத்தில் ராகு/கேது தோஷம் இருப்பவர்கள் சுய ஜாதகத்தை பரிசீலிக்க வேண்டும்.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை
கும்ப ராசிக்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தன விரயம் மிகுதியாக இருக்கும் என்பதால் எந்த விசயத்தையும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். ஏழில் கேது இருப்பதால் நல்ல தொழில் திறமையும், அனுபவமும் நிறைந்த நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் விலகலாம். வெளிப்பார்வைக்கு அனுபவம் மிகுந்தவர் போலவும் தொழில் தந்திரம் தெரியாத புதிய கூட்டாளியுடன் நட்பு ஏற்படலாம். யாரையும் நம்பி பணம் சம்பந்தபட்ட விஷயங்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
கும்ப ராசிக்கு 5,8ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம்.5,8மிடங்கள் பணபர ஸ்தானமாகும்.
கோட்ச்சார குருவால் பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குகிறது. நிறைந்த தன லாபம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து பயணிப்பதால் பங்குச்சந்தை ஆர்வலர்கள் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு பங்குச்சந்தையில் ஈடுபடுவது நல்லது. சிலருக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய நேரலாம்.பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் வரலாம்.
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை)
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் வேலையாட்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் விலகலாம். சிலர் வாழ்நாள் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டிற்கு செல்லலாம்.
14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.ஏற்றம், இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்படுவது சகஜம். எந்த பிரச்சனையும் நிரந்தரமல்ல என்பதால் இறை வழிபாட்டில் கவனம் செலுத்த நிம்மதி அதிகரிக்கும்.
பரிகாரம்
கும்ப ராசியினர் வியாழக்கிழமை விரதம் இருந்து மூன்று நெய் தீபம் ஏற்றி குரு பகவானை வழிபடுவதால் கோச்சார கெடு பலன்கள் குறையும். வெள்ளிக்கிழமைகளில் வராகியம்மனை வழிபடுவதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406