கிட்னி விற்பனை விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
- இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர்.
- தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை:
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமானது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பால் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர். இது 1994 மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்திற்கு எதிரானது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஏன் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், "இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தெரியவந்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, "பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, ஐ.பி.எஸ். அலுவலர் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.