

ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார்.