தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
Published on

விருதுநகர்

விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரும், மருதுசேனை அமைப்பின் நிர்வாகியாகவும் இருந்த குமரவேல் விருதுநகர் பஜாரில் இருந்த தனது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடியில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டாபட்டியை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது24), ஹரிஹரன் (22) ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் ஞானசேகரன்(57), விக்ரமன்(55) ஆகியோர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதையடுத்து சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்த அமிர்தசங்கர் என்பவரை விருதுநகர் அழைத்து வந்து விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com