உள்ளூர் செய்திகள்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நரியனூர் காலனி மக்கள்.  

இலவச வீட்டு மனை, கடன் உதவி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு மனு கொடுத்த மக்கள்

Published On 2023-07-03 09:17 GMT   |   Update On 2023-07-03 09:17 GMT
  • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
  • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

தர்ணா போராட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களாகிய எங்களுக்கு, குடியிருக்க வீடு இல்லாமல் மழை காலங்களில் ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் என அடைபட்டு கிடக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளிப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமாக குண்று நிலம் அதிகமாக உள்ளது. அந்த நிலத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல தலைவாசல் அருகே உள்ள பெரியேரி காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் சுமார் 30 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ரூ.1500 உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதுடன், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பாகல்பட்டி கிராமம் தாசநாயக்கன்பட்டி அருந்ததிர் காலனி மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் உதவி கேட்டு

சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

சேலம் மாநகராட்சி 45-வது வார்டு பஞ்சதாங்கி ஏரி நரிக்குறவர் காலனியில் 42 வருடமாக வாழ்ந்து வருகிறோம். காலம் காலமாக எங்கள் சமுதாய மக்கள், ஊசி பாசி மணி மாலைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.

எங்கள் சமுதாய மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் திறமை, தகுதிக்கேற்ப அண்ணல் அம்பேத்கார் மற்றும் தாட்கோ மூலம் கடன் உதவி அளித்து நரிக்குறவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரசும் மானிய கடன் வழங்க முன் வந்தாலும் வங்கியில் உள்ள மேல் அதிகாரிகள் மானியக் கடன் தர தயக்கம் காட்டுகிறார்கள். ஆகவே அரசு அதிகாரிகளும், எங்கள் மீது கருணை கூர்ந்து மானிய கடன் உதவி பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News