உள்ளூர் செய்திகள்

ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா

Published On 2022-06-25 09:22 GMT   |   Update On 2022-06-25 09:22 GMT
  • ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது
  • அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்

அரியலூர் :

அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் சார்பில் 6-ம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது.

விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:

புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும். சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும். அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏன் உலகத் தலைவர்கள் அனைவரும், புத்தகங்களை வாசித்ததன் மூலம் தான் உயர்வான இடத்தினை அடைந்தார்கள்.

பல்வேறு அறிஞர்கள் எல்லாம், தனித்து சிந்தித்ததால் தான், வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய பாதை படைத்தனர். அதற்கு, புத்தக வாசிப்பு தான். எனவே அனைத்து தரப்பினரும் புத்தகங்கள் வாசிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொதுத் தேர்வில் மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் மதிப்பெண் என்பதை சொல்லக்கூடாது. இதனை பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு முக்கியமாக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் கீழ் ஊராட்சி தலைவருக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்படும். தற்காலிகமாக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 13,300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை வரும் 1-ந்தேதி முதல் நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News