search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்
    X

    குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்

    ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி 2-வது வெற்றியை ருசித்துள்ளது.
    ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய குஜாராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    முக்கிய மூன்று வீரர்கள் வெளியேறியதால் குஜராத் அணியால் அதிக அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை. ராய் (31), கார்த்திக் (30), வெயின் ஸ்மித் (37) ஆகியோர் ஒரளவு ரன்கள் சேர்த்ததால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், தவானும் களம் இறங்கினார்கள். தவான் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீண் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வார்னர் உடன் ஹென்றிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    வார்னர், ஹென்றிக்ஸின் அரைசதத்தால் சன்ரைசர்ஸ் அணி 15.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 45 பந்தில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 76 ரன்களுடனும், ஹென்றிக்ஸ் 39 பந்தில் 52 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. குஜராத் அணி இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
    Next Story
    ×