முதல்முறை: 2028-ல் உலக உள்ளரங்கு தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா

2028-ஆண்டுக்கான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
முதல்முறை: 2028-ல் உலக உள்ளரங்கு தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா
Published on

புதுடெல்லி:

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 22-வது உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள டோருனில் இன்று முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் போலந்தில் நேற்று நடந்த உலக தடகள கவுன்சில் கூட்டத்தில் அடுத்த உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

இதில் 2028-ஆண்டுக்கான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த தகவலை உலக தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவரும், இந்திய தடகள சம்மேளன தலைவருமான அடில் சமரிவல்லா தெரிவித்துள்ளார்.

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த இந்திய தடகள சம்மேளனம் கடந்த ஜனவரி மாதம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தது. உலக தடகள சம்மேளனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உள்ள உள்ளரங்க வசதிகளை நேரில் பார்வையிட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக கவுரவமிக்க இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த உள்ளரங்கு தடகளப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஜப்பான் (1999), கத்தார் (2010) மற்றும் சீனா (2025) ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியை நடத்தும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com