

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க இந்திய மல்யுத்த சம்மேளனம் அண்மையில் தடை விதித்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற உடல்தகுதி இல்லையென கூறி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு அண்மையில் மல்யுத்த சம்மேளனம் தடை விதித்தது. முன்னதாக சம்மேளனம் உடல் தகுதிக்கான அளவுகோல்களில் திருத்தம் செய்தது.
கடந்த ஜூலையில் குழந்தை பெற்றெடுத்த வினேஷ் போகத் இந்த தகுதியின் கீழ் வரவில்லை என சம்மேளனம் தெரிவித்தது.
மனு
இதையடுத்து மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுத் தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு
இந்த மேல்முறையீடு மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜ் கர்கரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் பேசிய நீதிபதிகள், சம்மேளனத்தின் முடிவு பல சந்தேகங்களை எழுப்புகிறது. வினேஷ் போகத்தை மட்டுமே இலக்கு வைத்து சம்மேளனம் தனது தகுதி நெறிமுறைகளில் திடீரென மாற்றங்களைச் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் வினேஷ் போகத் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அவரது உடல் தகுதியை மதிப்பீடு செய்ய வேண்டும்.
தாய்மையைக் கொண்டாடும் நாடு, அதனை முடக்கக் கூடாது சம்மேளனத்தின் பூசல்களால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் பாழாகக் கூடாது." என்று தெரிவித்தனர்.
போராட்டம்
2023 இல் மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும் முன்னாள் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் மீது நடவடிக்கை எடுக்க நீண்ட போராட்டம் நடத்தியவர்களில் வினேஷ் போகத்தும் ஒருவர்.
பிரிஜ் பூஷனால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளில் தானும் ஒருவர் என அண்மையில் வினேஷ் போகத் தெரிவித்திருந்தார். தற்போது மல்யுத்த சம்மேளன தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பர் என்பதால் தான் பழிவாங்கப்படுவதாக வினேஷ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.