

நான்கு ஆண்டுகள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகி இருந்த செரீனா வில்லியம்ஸ், மீண்டும் தொழில்முறை டென்னிஸுக்குத் திரும்புவதாக சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இவரது அறிவிப்பு வெளியானதில் இருந்தே இதுபற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர் விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் விளையாடுவார் என்று ஆல் இங்கிலாந்து கிளப் வெளியிட்ட அறிவிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது.
புல்வெளி மைதான கிராண்ட்ஸ்லாம் தொடங்குவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், "செரீனா வில்லியம்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு பெறுகிறார்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
44 வயதான வில்லியம்ஸ், தனது மூத்த சகோதரி வீனஸுடன் இரட்டையர் போட்டிக்கான வைல்டு கார்டை ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட நிலையில், விம்பிள்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் விளையாட உள்ளார்.
"இது ஒரு ஒத்திகை அல்ல," என்று விம்பிள்டன் தனது சமூக வலைதள கணக்குகளில் தெரிவித்தது.
"இதைவிட ஒரு வரலாற்று சிறப்புமிக்க ரீ-என்ட்ரியை கூறுங்கள்... நாங்கள் காத்திருக்கிறோம்," என்று WTA டூர் கருத்து தெரிவித்தது.
வைல்ட் கார்டுகள் என்பவை போட்டி அமைப்பாளர்களால் வழங்கப்படும் சிறப்பு அழைப்பிதழ்கள் ஆகும். இவை, முன்னாள் சாம்பியன்கள் மற்றும் பிறரை, தேவையான நுழைவு தகுதிகள் இல்லாமலேயே பிரதான சுற்றுக்குள் நுழைய அனுமதிக்கின்றன.