

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 6 வீரரும், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆடம் வால்டன் முதல் செட்டை 6-2 என வென்றார். இதற்கு பதிலடியாக மெத்வதேவ் 2வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆடம் வால்டன் 3வது செட்டை 6-1 என வென்றார். இதனால் சற்றும் அசராத மெத்வதேவ் 4வது செட்டை 6-1 என மீண்டும் கைப்பற்றினார். இதனால் 2-2 என சமனிலை ஏற்பட்டது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அதிரடியாக ஆடிய ஆடம் வால்டன் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சுமார் 3 மணி 22 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.
இதன்மூலம் டாப் 6 வீரரான டேனில் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.