இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டாக ராஜினாமா!

நிதி முறைகேடுப் புகார்கள் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டாக ராஜினாமா!
Published on

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வாவும், அதன் செயற்குழு உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக இன்று பதவி விலகியுள்ளனர். அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கேட்டுக்கொண்டதன்பேரில், இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளது.

நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தொடர்ந்து மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்தே சில்வாவை அப்பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வந்தது .

கடந்த 2019 முதல் நான்கு முறை போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, 2023-ல் அரசியல் தலையீடு காரணமாக ஐசிசி மூலம் இலங்கை அணி இடைநீக்கம் செய்யப்பட்ட போதும் தனது பதவியைத் தக்கவைத்திருந்தார்.

தற்போது அரசின் நேரடி வலியுறுத்தல் காரணமாக அவர் விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டின் அனைத்து நிர்வாகப் பணிகளும் தற்காலிகமாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கும், கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கும் ஒரு இடைக்காலக் குழு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com