

லாசானே:
தென்கொரியாவில் கடந்த ஆண்டு நடந்த உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 19 வயது இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இரட்டையர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவிலும் பதக்கத்தை கைப்பற்றினார். பாரா ஒலிம்பிக், ஆசிய போட்டியிலும் பதக்கமேடையில் ஏறியுள்ளார்.
இரண்டு கைகளும் இல்லாத ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஷீத்தல் தேவி தனது கால்கள் மற்றும் தோள்பட்டையை திறம்பட பயன்படுத்தி குறி தவறாமல் அம்புகளை எய்து ஜொலிக்கிறார். அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், கடந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த பாராவில் வித்தை வீராங்கனை விருதுக்கு உலக வில்வித்தை சம்மேளனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'இந்த விருது தனிப்பட்ட முறையில் என்னை நெகிழ வைக்கிறது. நன்றியுணர்வாலும், உணர்ச்சி பெருக்காலும் எனது இதயம் நிரம்பியுள்ளது. அனைவருக்கும் நன்றி' என ஷீத்தல் குறிப்பிட்டுள்ளார்.