

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகக் கருதப்படும் 'லியோனல் மெஸ்ஸி' இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
தற்போது அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் FIFA World Cup 2026 தொடரின் நடுவே இந்த பிறந்தநாள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரியாவுக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் மெஸ்ஸி 2 அசுரத்தனமான கோல்களை அடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பிரம்மாண்டமான வரலாற்றுச் சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்காக வெறும் 2 போட்டிகளில் விளையாடி 5 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி தற்போது முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸியின் அபாரமான ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி குரூப் 'J' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்குதகுதி பெற்றுள்ளது.
தற்போது அமெரிக்காவின் 'இன்டர் மியாமி' கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, இதுவரை அர்ஜென்டினாவுக்கு 2021 கோபா அமெரிக்கா மற்றும் 2022 உலகக்கோப்பை மகுடங்களை சூட்டியுள்ளார். மேலும், கால்பந்து உலகின் உயரிய விருதான "பாலோன் டி ஆர்" விருதை 8 முறை வென்ற ஒரே வீரர் இவராவார்.
39 வயதிலும் தனது அசாத்திய வேகத்தாலும் திறமையாலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வரும் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பையையும் வென்று அர்ஜென்டினாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பார் என்பதே ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.