Video : ஜஸ்பால் ராணாவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்!

ஸ்டென்ட் அறுவை சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், தூக்கத்திலேயே மாரடைப்பால் தனது 49 வயதில் காலமானார்.
JaspalRana
Published on

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியை முடித்துவிட்டு இந்தியக் குழுவுடன் டெல்லி திரும்பும் போது, இந்திய துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும் தேசிய பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணாவுக்கு (ஜூன் 11) திடீர் நெஞ்சுவலியும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது.

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதய அடைப்புக்கான ஸ்டென்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி (ஜூன் 12) அதிகாலையில் தூக்கத்திலேயே மாரடைப்பால் காலமானார்.

அவரது பூதவுடல் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பவுந்தா இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற அவரது முக்கிய வீராங்கனையான மனு பாக்கர் மற்றும் பலர் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று (ஜூன் 13) டேராடூன் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

முக்கிய தலைவர்கள் இரங்கல்..

பிரதமர் நரேந்திர மோடி, ஜஸ்பால் ராணாவின் மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஒரு பேரிழப்பு என்றும், அவரது சாதனைகளும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் நட்சத்திர வீரராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கி, நாட்டின் இளம் திறமைகளை உருவாக்கிய ஜஸ்பால் ராணாவின் பங்களிப்பு அளப்பரியது" என கூறியுள்ளார்.

ஜஸ்பால் ராணாவின் வரலாற்றுச் சாதனைகள்..

இந்திய துப்பாக்கிச் சுடுதல் துறையில் ஜஸ்பால் ராணா படைத்த வரலாற்றுச் சாதனைகள் என்றும் அழியாதவை.

1994-ல் ஹிரோஷிமா ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று, மிக இளம் வயதிலேயே அர்ஜுனா விருதைப் பெற்றார்.

தொடர்ந்து அவரது சிறந்த பங்களிப்பிற்காக 1997-ல் இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருதும், 2020-ல் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஒரு சிறந்த பயிற்சியாளராக அவர் உருவாக்கிய மனு பாக்கர், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது ஜஸ்பால் ராணாவின் மிகச்சிறந்த வழிகாட்டலுக்கு சான்றாக விளங்குறது.

மேலும் ஜஸ்பால் ராணாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com